நீட் முறைகேடு | உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு பதில் மனு இன்று விசாரணை..!!
நீட் தேர்வு முறைகேடு விவகாரத்தில் மத்தியஅரசு பதில் மனுவை தாக்கல் செய்த நிலையில் இன்று வழக்கு உச்சநீதிமன்றம் விசாரணைக்கு வரவுள்ளது.
மருத்துவப் படிப்புகளில் மாணவ, மாணவிகள் சேர உதவும் நீட் தேர்வு கடந்த மே 5-ம் தேதி நடைபெற்றது. நீட் தேர்வு நடைபெற்ற தினத்தில் ராஜஸ்தான் மாநிலத்தில் வினாத்தாள் கசிந்ததாகவும், ஆள்மாறாட்டம் நடந்ததாகவும் புகார் எழுந்தது. ஆனால், இதை தேசிய தேர்வு முகமை (என்டிஏ) மறுத்திருந்தது. இதனிடையே, இம்மாத தொடக்கத்தில் நீட் தேர்வு முடிவுகள் வெளியாயின.
இதில் ஹரியானா மாநிலத்தில் ஒரே மையத்தில் படித்த 6 பேர் 720 மதிப்பெண்கள் பெற்றதும் 1, 563 மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்கப்பட்டதும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பின்னர் எதிர்ப்பு அதிகரித்ததில் கருணை மதிப்பெண்கள் ரத்து செய்யப்பட்டு, மாணவர்களுக்கு மறுதேர்வு அறிவிக்கப்பட்டது. ஆனபோதும், வினத்தாள் கசிவு தொடர்பான புகார்களை மத்திய அரசு மறுத்து வந்தது. ஆனால் பீகாரில் கைது செய்யப்பட்ட நான்கு பேரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் நீட் வினாத்தாள் கசிவு நடந்து உறுதியாகி உள்ளது.
இந்த முறைகேடுகள் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் பல வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் உச்சநீதிமன்றத்தில் ஜூலை 5 மத்திய அரசு பிரமாண பத்திரம் தாக்கல் செய்தது. இந்த வழக்கு ஜூலை 8 அன்று தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் அமர்வில் விசாரணைக்கு வந்தது. நீட் தோ்வு முறைகேட்டின் தீவிரத்தின் அடிப்படையிலேயே மறுதோ்வை நடத்துவதா, இல்லையா என்று முடிவு செய்யப்படும் என முந்தைய விசாரணையின்போது உச்சநீதிமன்றம் தெரிவித்தது.
இதுதொடா்பாக மத்திய அரசு புதன்கிழமை தாக்கல் செய்த கூடுதல் பிரமாணப் பத்திரத்தில், 'நீட் தோ்வு முடிவுகளின் தரவுகளை வைத்து சென்னை ஐஐடி நடத்திய ஆய்வில், அசாதாரண சூழல் ஏதும் இல்லை என்பது தெரியவருகிறது. நிகழாண்டுக்கான மருத்துவக் கலந்தாய்வு ஜூலை மாதம் மூன்றாவது வாரத்தில் தொடங்கி நான்கு கட்டங்களாக நடைபெற உள்ளது' என்று தெரிவித்துள்ளது.
நீட் நுழைவுத் தோ்வை நடத்திய தேசிய தோ்வுகள் முகமை (என்டிஏ) தாக்கல் செய்துள்ள பதில் மனுவில், 'தேசிய, மாநில, நகரம், மையங்களின் அடிப்படையில் நீட் மதிப்பெண்கள் பகுப்பாய்வு செய்யப்பட்டன. அதில் மதிப்பெண்கள் வழங்கப்பட்டதில் வழக்கமான நடைமுைான் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது. இதில் யாருடைய தலையீடும் இல்லை. இதன்மூலம் நீட் தோ்வில் பெரும் முறைகேடு ஏதும் நடைபெறவில்லை என்பது உறுதியாகிறது' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மனு மீது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான அமா்வு வியாழக்கிழமை(இன்று) விசாரணை நடத்த உள்ளது.
Read more | 10 வருட காதல்.. மனம் திறந்த சாய்பல்லவி!! விரைவில் டும்..டும்..டும்