மருத்துவர்கள் நாளை பணிக்கு திரும்ப வேண்டும்..!! இல்லையெனில்.. செக் வைத்த உச்சநீதிமன்றம்
கொல்கத்தாவில் பயிற்சி மருத்துவர் படுகொலை செய்யப்பட்டது நாடு முழுக்க அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இந்த விவகாரத்தைக் கண்டித்து இதுநாள் வரை நாட்டின் பல பகுதிகளில் போராட்டங்கள் நடந்த நிலையில், இப்போது அது சர்வதேச அளவில் வெடித்துள்ளது. நேற்று ஒரே நாளில் 25க்கும் மேற்பட்ட நாடுகளில் போராட்டங்கள் வெடித்தன.
ஜப்பான், ஆஸ்திரேலியா, தைவான் மற்றும் சிங்கப்பூர் என்று உலகம் முழுக்க பல்வேறு நாடுகளில் உள்ள முக்கிய நகரங்களில் பெரிய மற்றும் சிறிய அளவில் போராட்டங்கள் நடந்தன. ஆசிய நாடுகள் மட்டுமின்றி பல ஐரோப்பிய நாடுகள் மற்றும் அமெரிக்கா முழுக்க போராட்டங்கள் வெடித்தன. இந்தியாவில் ஏற்கனவே போராட்டங்கள் நடந்து வந்த நிலையில், இப்போது அது உலகெங்கும் வெடித்துள்ளன.
ஸ்வீடன் நாட்டின் தலைநகர் ஸ்டாக்ஹோமில் மிகப் பெரிய பெரியளவில் ஆர்ப்பாட்டங்கள் நடந்தன. அங்குள்ள செர்கெல்ஸ் டோர்க் சதுக்கத்தில் கறுப்பு உடை அணிந்த பெண்கள் பெங்காலி மொழியில் பாடல்களைப் பாடி, இந்தியப் பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் எனச் சொல்லி முழக்கங்களை எழுப்பினர்.
இந்த வழக்கை உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்தது. கடந்த 22 ஆம் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, மருத்துவ மாணவி பலியான சம்பவத்தில் வழக்கு பதிவு செய்ய தாமதம் செய்தது ஏன்? என கொல்கத்தா போலீசாருக்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியது.
இந்நிலையில் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது கொல்கத்தா பயிற்சி பெண் மருத்துவர் கொலை வழக்கில் இதுவரை என்ன விசாரணை நடைபெற்று இருக்கிறது; என்ன மாதிரியான விவரங்கள் தெரியவந்துள்ளன; மேற்கொண்டு என்ன விசாரணை நடந்து கொண்டிருக்கிறது என்பவை உள்ளிட்ட விவரங்கள் குறித்த அறிக்கையை சிபிஐ தாக்கல் செய்துள்ளது. அதேபோல மேற்கு வங்க அரசு தரப்பிலும் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், மருத்துவர்கள் போராடி வரும் நிலையில், 23 நோயாளிகள் உயிரிழந்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிபிஐ மற்றும் மேற்கு வங்க அரசு தாக்கல் செய்த அறிக்கைகளை தற்போது நீதிபதிகள் ஆய்வு செய்தனர்.
இந்த 2 அறிக்கையை வைத்து உச்சநீதிமன்றம் விசாரணையை தொடங்கியது. பாலியல் வம்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட விவகாரத்தில் வழக்கு எப்போது பதிவு செய்யப்பட்டது என்று சிபிஐ மற்றும் மேற்கு வங்க அரசிடம் தலைமை நீதிபதி கேள்வி எழுப்பினார். பிற்பகல் 2.55 மணிக்கு பதிவு செய்யப்பட்டது என்றும், இறப்பு சான்றிதழ் 1.45 மணிக்கு வழங்கப்பட்டது என்றும் மேற்கு வங்க அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கபில்சிபில் தெரிவித்தார்.
வீடியோ பதிவுகள் சிபிஐயிடம் ஒப்படைக்கப்பட்டு விட்டதா? என்றும் தலைமை நீதிபதி சந்திரசூட் கேட்டார். அதற்கு பதிலளித்த சிபிஐ தரப்பில் ஆஜரான சொலிசிடர் ஜெனரல் துஷார் மேத்தா, பெண் பயிற்சி டாக்டர் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டது தொடர்பான தடயவியல் மாதிரிகள் மேற்கு வங்காளத்தில் ஆய்வு செய்யப்பட்டது. ஆனால் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு தடயவியல் மாதிரிகளை அனுப்ப விசாரணை நிறுவனமான சிபிஐ முடிவு செய்துள்ளது' என்றார்.
இதனை கேட்ட நீதிபதிகள்,'வரும் செவ்வாய்க்கிழமைக்குள் (செப். 17) புதிய நிலை அறிக்கை தாக்கல் செய்ய சிபிஐக்கு உத்தரவிடுகிறோம். இதற்கிடையே இவ்வழக்கில் என்ன நடக்கிறது என்று பார்ப்போம்' என்று கூறி வழக்கை ஒத்திவைத்தனர். மேலும் மருத்துவா்கள் போராட்டங்களை கைவிட்டு நாளை மாலை 5 மணிக்குள் பணிக்கு திரும்ப வேண்டும் எனவும் உத்தரவிட்டனர். அவ்வாறு மருத்துவா்கள் பணிக்கு திரும்பவில்லை என்றால் அரசு சாா்பில் துறை சாா்ந்த நடவடிக்கைகள் எடுப்பதை தடுக்க முடியாது எனவும் எச்சாிக்கை விடுத்துள்ளது.