For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

பாஜக வரலாறு : ஜனசங்கமாக தொடங்கி, பாரதிய ஜனதா கட்சியாக வளர்ந்த கதை!!

english summary
10:30 AM Jun 04, 2024 IST | Mari Thangam
பாஜக வரலாறு   ஜனசங்கமாக தொடங்கி  பாரதிய ஜனதா கட்சியாக வளர்ந்த கதை
Advertisement

இந்திய அரசியலில் தற்போது தவிர்க்க முடியாத அரசியல் கட்சிகளில் ஒன்று பாஜக. பாரதிய ஜனதா கட்சி என்று இன்று அழைக்கப்படும் பாஜகவின் தேர்தல் பயணம் குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

Advertisement

காங்கிரஸில் தீவிர வலதுசாரி அரசியலால் ஈர்க்கப்பட்டவர் சியாம் பிரசாத் முகர்ஜி. சுதந்திரத்துக்குப் பிறகு நேருவின் இடைக்கால அரசில் அமைச்சராக இருந்த அவர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, பாரதிய ஜனசங்கத்தைத் தொடங்கினார். புதிய இந்துத்துவ அரசியல் கட்சியான பாரதிய ஜனசங்கத்துக்கு ஆர்எஸ்எஸ் நிர்வாகிகளை அளித்து முழு ஒத்துழைப்பு அளித்தது. ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் மூத்த நிர்வாகியாக இருந்த தீனதயாள் உபாத்யாயா பாரதிய ஜனசங்கத்தின் பொதுச்செயலாளர் பொறுப்பை ஏற்றார்.

ஆர்எஸ்எஸ் அமைப்பால் உருவாக்கப்பட்ட அப்போதைய தலைவர்களான அடல் பிஹாரி வாஜ்பாய், அத்வானி போன்றோரும் ஜனசங்கத்தின் முக்கிய பொறுப்புகளை ஏற்று கட்சியை வழி நடத்தினர். இருப்பினும், 1951- 52 ஆம் ஆண்டு நடந்த முதல் பொதுத் தேர்தலில் வெறும் 3 இடங்களில் மட்டுமே பாரதிய ஜனசங்கம் வெற்றி பெற்றது. அதன் பிறகு 1967-ம் ஆண்டு வரை ஜனசங்கம் பெரிய அளவில் தேர்தல்களில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.

சியாம் பிரசாத் முகர்ஜியின் மரணத்துக்குப் பிறகு தீனதயாள் உபாத்யாயா கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்றார். நேருவின் மரணத்துக்குப் பிறகு 1967-ம் ஆண்டில் இந்திய அரசியல் புதிய பாதைகளை நோக்கிப் பயணப்பட்டது. இந்திரா காந்தியின் அரசியலை எதிர்த்த மொராஜ் தேசாய், சரண் சிங் போன்றவர்கள் காங்கிரஸுக்கு எதிராக மற்ற கட்சிகளை அணி திரட்டும் முயற்சியிலும் ஈடுபட்டனர். வட மற்றும் மத்திய இந்தியாவில் வலிமையான தளத்தைக் கொண்டிருந்த ஜனசங்கமும், அந்தத் தலைவர்களுடன் கைகோத்து அரசியல் செய்தது.

இடதுசாரி சிந்தனை கொண்ட சோசலிஸ்டுகளையும், தீவிர வலதுசாரி சிந்தனை கொண்ட ஜனசங்கத்தினரையும் ஓரணியில் கொண்டு வந்தது. நெருக்கடி நிலையை எதிர்த்து ஜெய பிரகாஷ் நாராயணன் நடத்திய மக்கள் இயக்கத்தில் ஜனசங்கத் தலைவர்களும் தங்களை இணைத்துக் கொண்டு போராட்டம் நடத்தினர். சிறையில் சென்ற ஜனசங்கத் தலைவர்களுக்கு அங்கு சோசலிஸ்ட் தலைவர்களுடன் நெருங்கிப் பழகும் சூழல் உருவாகியது. இதன் மூலம் இந்திய அரசியலில் யாருடனும் தொடர்பு இல்லாமல் தனிப்பாதையில் சென்று கொண்டிருந்த ஜனசங்கத்துக்கு பொது அரசியலில் பங்கேற்கும் வாய்ப்பு ஏற்பட்டது.

இந்திராவுக்கு எதிராக உருவான மக்கள் இயக்கம் புதிய அரசியல் சக்தியாக ஜனதா கட்சியாக உருவெடுத்தது. இதில் ஜனசங்கமும் தன்னை இணைத்துக்கொண்டது. 1980-ம் ஆண்டு ஆர்எஸ்எஸ்ஸின் இந்துத்துவ தேசியத்தை அரசியல் தளத்தில் கொண்டு செல்லும் புதிய அரசியல் கட்சியாக பாரதிய ஜனதா கட்சி உருவானது. பாஜகவின் முதல் தலைவராக வாஜ்பாய் பொறுப்பேற்றார். ஆனாலும் இந்திரா காந்தியின் படுகொலைக்குப் பிறகு 1984-ம் ஆண்டு நடந்த பொதுத்தேர்தலில் அனுதாப அலையால் காங்கிரஸ் பெரும் வெற்றி பெற்றது. முதல் தேர்தலில் பாஜக வெறும் 2 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. கட்சியின் முக்கியத் தலைவர்கள் அனைவரும் தோற்றுப்போயினர்.

கட்சி வேகமாக வளர்ந்தாலும், காங்கிரஸ் முன்பு இருந்ததைப் போல தனியாக அறுதிப் பெரும்பான்மை பெருமளவுக்கு பாஜக வளரவில்லை. இருபெரும் தேசியக் கட்சிகளுக்கும் பெரும்பான்மை கிடைக்காத சூழலில் 1996-ம் ஆண்டு தேர்தலில் அதிக இடங்களை வென்றபோதும், வாஜ்பாய் அரசு 13 நாட்கள் மட்டுமே நீடித்தது.

அதனைத்தொடர்ந்து, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 1999 ஆம் நடந்த பொதுத் தேர்தலில் 303 இடங்களில் வென்றது. பாஜக மட்டுமே 183 இடங்களில் வென்றது. வாஜ்பாய் மூன்றாவது முறையாகப் பிரதமராகவும், அத்வானி துணைப் பிரதமராகவும் உள்துறை அமைச்சராகவும் பதவியேற்றனர். இம்முறை, தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு தனது ஆட்சிக்காலமான ஐந்து ஆண்டுகள் வரை நீடித்தது.

2002-ம் ஆண்டு குஜராத்தில் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தை தொடர்ந்து,  மத்திய பாஜக அரசுக்கும் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியது. கூட்டணி அரசியலுடன், இந்துத்துவ அரசியல் என பாஜகவின் 5 ஆண்டுகாலப் பயணம் நிறைவடைந்தது.  தனித்துப் போட்டியிட்டு அதிகமான இடங்களைப் பெற முடியாத சூழலில் இணக்கமான மாநிலக் கட்சிகளுடன் கூட்டணி சேர்ந்து 2004-ம் ஆண்டு தேர்தலைச் சந்தித்தது. முந்தைய வாஜ்பாய் அரசில் இடம் பெற்றிருந்த திமுக உள்ளிட்ட சில மாநிலக் கட்சிகள் இந்தமுறை காங்கிரஸுடன் கரம் கோத்தன.

145 இடங்களில் வென்ற காங்கிரஸ் மாநிலக் கட்சிகள் மற்றும் இடதுசாரிக் கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்தது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி தோல்வியைச் சந்தித்தது. அக்கட்சி 138 இடங்களில் மட்டுமே வென்றது. ஏற்கெனவே உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த வாஜ்பாய் தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கிக் கொள்ள, நாடாளுமன்றத்தில் அத்வானியின் தலைமையில் பாஜக எதிர்க்கட்சியாக அமர்ந்தது.

வெறும் இந்துத்துவா அரசியல் மட்டும் வெற்றிக்குப் போதுமானதல்ல என்பதை பாஜக உணரத் தொடங்கியது. குஜராத்தில் மோடியின் வளர்ச்சி அரசியல் தொடர்ந்து வெற்றி பெற்று வந்த சூழலில் அதனை இந்தியா முழுமைக்கும் பொருத்திப் பார்க்கும் புதிய அரசியலை கையில் எடுத்தது பாஜக. இதனால், 2014-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலை புதிய தலைமையின் கீழ் சந்திக்க பாஜக தயாரானது. மோடியை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தி நடந்த தேர்தலில் பெரும் வெற்றி பாஜகவுக்குக் கிடைத்தது.

5 ஆண்டுகால ஆட்சியில் அடுத்தடுத்து நடந்த சட்டப்பேரவை தேர்தல்களில் வெற்றி பெற்ற பாஜக, காங்கிரஸ் இல்லாத இந்தியா என்ற கோஷத்தை முன் வைத்தது. இருப்பினும் மோடி அரசின் செயல்பாடுகள், அரசு மீதான மக்களின் அதிருப்தி, எதிர்க்கட்சிகளின் ஒன்றிணைவு போன்றவை வரும் மக்களவைத் தேர்தலில் மோடி தலைமையிலான பாஜக அரசு சந்திக்கும் பெரும் சவாலாக உள்ளது. அதேசமயம் வசீகரமான தலைமை, எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையின்மை போன்றவை பாஜகவுக்குச் சாதகமாக உள்ளது.

Read more ; வாக்களிப்பில் உலக சாதனை : இந்திய தலைமை தேர்தல் ஆணையர் பெருமிதம்!

Tags :
Advertisement