For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு எப்போது நடத்த போறீங்க...? பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி...?

06:48 AM Feb 13, 2024 IST | 1newsnationuser2
சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு எப்போது நடத்த போறீங்க     பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி
Advertisement

தமிழக சட்டப்பேரவையில் ஆளுநரின் பெயரால் படிக்கப்பட்ட உரையில் தமிழகத்துக்குப் பயன் அளிக்கும் வகையில் எந்தத் திட்டமும் இடம்பெறவில்லை. தமிழக அரசு அடுத்த ஓராண்டுக்கு எந்த திசையில் பயணிக்கப் போகிறது என்பதற்கான எந்த அறிகுறியும் ஆளுநர் உரையில் இல்லாதது வருத்தமளிக்கிறது.

Advertisement

பாமக நிறுவனர் ராமதாஸ் தனது அறிக்கையில்,; 2024-ஆம் ஆண்டுக்கான முதலாவது சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. மரபுகளின்படி ஆளுநர் ஆர்.என்.ரவி அவரது உரையை படித்து கூட்டத் தொடரை தொடங்கி வைத்தார். ஆளுநரின் உரையில் குறிப்பிட்டு சொல்லும்படி எந்தத் திட்டமும் இல்லை. 2021-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பை சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பாக நடத்த வேண்டும் என்று இந்தியப் பிரதமரை முதல்வர் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டிருப்பதாக ஆளுநர் உரையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

2021-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பை சாதிவாரி கணக்கெடுப்பாக நடத்த வேண்டும் என்று பிரதமருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த அக்டோபர் மாதமே கடிதம் எழுதியிருந்தார். அப்போதே அதை பாமக கடுமையாக விமர்சித்தது. சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை மாநில அரசே நடத்த அதிகாரம் இருக்கும்போது, அதற்காக மத்திய அரசை அணுகத் தேவையில்லை என்றும், சமூக நீதியை காக்கும் விஷயத்தில் பொறுப்பைத் தட்டிக்கழிக்கும் செயல் என்றும் நான் குற்றஞ்சாட்டியிருந்தேன்.

அதைத் தொடர்ந்து தமிழக முதல்வரை நானே நேரில் சந்தித்து, சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்த மாநில அரசுக்கு உள்ள அதிகாரங்கள் குறித்தும், அவ்வாறு செய்வதால் ஏற்படும் நன்மைகள் குறித்தும் விரிவாக விளக்கினேன். ஆனால், அதன்பிறகும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்துவதாக தமிழக அரசு மீண்டும், மீண்டும் கூறுவது சமூக நீதியைக் காப்பதில் தமிழக அரசுக்கு அக்கறையும் இல்லை; தெளிவும் இல்லை என்பதையே காட்டுகிறது. இனியாவது தமிழக அரசு தெளிவு பெற்று சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும்.

தமிழகத்தில் ஒரு கோடிக்கும் கூடுதலான இளைஞர்கள் படித்த படிப்புக்கு ஏற்ற வேலை கிடைக்காமல் தவித்து வருகின்றனர், தமிழக அரசுத் துறைகளில் 5 லட்சத்திற்கும் கூடுதலான பணியிடங்கள் காலியாக உள்ளன. இரண்டுக்கும் தீர்வு காணும் வகையில் அரசுத்துறைகளில் காலியாக உள்ள இடங்களை நிரப்ப வேண்டும் என்ற குரல் தொடர்ந்து எழுப்பப்பட்டு வருகிறது. ஆனால், காலியாக உள்ள அரசு பணியிடங்களை நிரப்புவது குறித்து ஆளுநர் உரையில் எந்த அறிவிப்பும் இடம் பெறாதது ஏமாற்றமும், வருத்தமும் அளிக்கிறது என தெரிவித்துள்ளார்.

Tags :
Advertisement