மாணவர்களுக்கு 2ம் கட்ட விருது வழங்கும் விழா : அதிகாலையிலேயே என்ட்ரீ கொடுத்த விஜய்!! ஆனா.. இவர்களுக்கு அனுமதி கிடையாது!!
கடந்த 2022 -2023 கல்வியாண்டில் 10 மற்றும் 12-ம் வகுப்பு தேர்வுகளில் தொகுதி வாரியாக முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ-மாணவிகளை நடிகர் விஜய் நேரில் அழைத்து ஊக்கத்தொகை வழங்கினார். விஜய் மக்கள் இயக்கம் சார்பில் இதற்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அதேபோல 2-வது ஆண்டாக, இந்த ஆண்டும் 2023 -2024 கல்வியாண்டில் தொகுதிவாரியாக முதல் மூன்று மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களை பாராட்டி கௌரவிக்கும் விழா சில தினங்களுக்கு முன்பு நடைபெற்றது.
முதற்கட்டமாக ஜூன் மாதம் 28-ம் சென்னை திருவான்மியூரில் உள்ள ஸ்ரீராமச்சந்திரா கன்வென்ஷன் சென்டரில் நடைபெற்ற விழாவில், அரியலூர், கோயம்புத்தூர், தருமபுரி, திண்டுக்கல், ஈரோடு, கன்னியாகுமரி, கரூர், கிருஷ்ணகிரி, மதுரை, நாமக்கல், நீலகிரி, புதுக்கோட்டை, இராமநாதபுரம், சேலம், சிவகங்கை, தென்காசி, தேனி. தூத்துக்குடி, திருநெல்வேலி, திருப்பூர், விருதுநகர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகளை பாராட்டி பரிசுகள் மற்றும் ஊக்கத்தொகை வழங்கி கெளரவித்தார்.
இதில் 800க்கும் மாணவ மாணவிகள் பங்கு பெற்றனர். தொடர்ந்து 10 மணி நேரம் இந்த விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்று முடிந்தது. மாணவ மாணவிகளுக்கு வைரத் தோடு கம்மல் மோதிரம் பரிசாக வழங்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து இரண்டாம் கட்டமாக கல்வி விருது வழங்கும் விழா இன்று (ஜூலை 3) திருவான்மியூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெறுகிறது.
இதில் தமிழ்நாட்டில் செங்கல்பட்டு, சென்னை, காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி, கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், காரைக்கால், பெரம்பலூர், தஞ்சாவூர், திருச்சி, ராணிப்பேட்டை, திருவள்ளூர், திருவண்ணாமலை, திருவாரூர், திருப்பத்தூர், வேலூர், விழுப்புரம் ஆகிய 18 மாவட்ட மாணவ மாணவியருக்கு விருதுகள் மற்றும் ஊக்கத்தொகை வழங்கப்பட இருக்கிறது. மேலும், புதுச்சேரி மாநில மாணவ, மாணவியருக்கு விருதுகள் மற்றும் ஊக்கத்தொகை வழங்கப்பட உள்ளன. இந்த விழா இன்று காலை 10 மணியளவில் தொடங்குகிறது.
இந்த விழாவில் கலந்துகொள்ள தவெக தலைவர் விஜய் அதிகாலையிலேயே நிகழ்விடத்திற்கு வருகை தந்தார். துபாயில் இருந்து 20க்கும் மேற்பட்ட பவுன்சர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர். மொத்தம் சுமார் 100க்கும் மேற்பட்ட பவுன்சர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு வழங்கப்பட்ட பாஸை காண்பித்தால் மட்டுமே அவர்கள் உள்ளே செல்ல அனுமதிக்கப்படுகின்றனர். மேலும், மேலும் இன்று நடக்கும் இந்த நிகழ்ச்சியில் youtube கேமராக்களுக்கு அனுமதி இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.