2007-ல் இதே நாள்!. பாகிஸ்தானை வீழ்த்தி சாதனை படைத்த இந்தியா!. முதல் டி20 உலகக் கோப்பையை வென்ற நெகிழ்ச்சி!
T20 World Cup: சரியாக 17 ஆண்டுகளுக்கு முன்பு, இதே நாளில், இறுதிப் போட்டியில் பரம எதிரியான பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா டி20 உலகக் கோப்பையை வென்ற நெகிழ்ச்சியான தருணத்தை நினைவுப்படுத்துகிறது.
2007 டி20 உலகக் கோப்பையை இந்திய கிரிக்கெட் ரசிகர்களால் அவ்வளவு எளிதில் மறக்க முடியாது. பாகிஸ்தானுக்கு எதிராக டையான போட்டியில் வெற்றி பெற்றது, யுவராஜ் ஃபிளிண்டாப் மோதல், யுவராஜ் ஒரே ஓவரில் 6 சிக்சர், அரையிறுதியில் ஆஸ்திரேலியாவுடன் ஸ்ரீசாந்தின் எழுச்சி, பாகிஸ்தானுடனான விறுவிறுப்பான ஃபைனல் வெற்றி என தோனியின் தலைமைக்கு முதல் சாதனையாக விளங்கின.
ஏனென்றால், 2007இல் அதற்கு முன்னதாக நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பையில் இந்தியா படுதோல்வி அடைந்து முதல் சுற்றிலேயே வெளியேறியது. இதற்கடுத்து நடைபெற்ற 20 ஓவர் உலகக் கோப்பை அணியில் சீனியர்கள் சச்சின், கங்குலி, சேவாக் என எவரும் இன்றி அணி அறிவிக்கப்பட்டது. அப்போது முன்னாள் வீரர்கள் முதல் ரசிகர்கள் என அனைவரும் இந்த முடிவை விமர்சனம் செய்தனர். இந்த இளம் வீரர்கள் அடங்கிய அணி முதல் சுற்றைக்கூட தாண்டாது, தோனிக்கு கேப்டனாக என்ன தகுதி இருக்கிறது என பல கல்லடிகளைப் பெற்றது. ஆனால், அனைவரும் மூக்கில் விரல் வைத்தார் போல் இந்திய அணி சாதித்துக் காட்டியது.
2007 டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில், டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்த இந்திய அணி, கௌதம் கம்பீர் மற்றும் ரோஹித் ஷர்மா ஆகியோரின் அனல் பறக்கும் ஆட்டத்தால் 157/5 ரன்கள் எடுத்தது. கம்பீர் 54 பந்துகளில் 75 ரன்கள் எடுத்து அணியின் அதிகபட்ச ஸ்கோராக இருந்தார். அவர் அதிக அழுத்த ஆட்டத்தில் 8 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களை அடித்தார். அதேசமயம், ரோஹித் 16 பந்துகளில் 30 ரன்கள் குவித்தார். அவர் இரண்டு பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடித்தார்.
இதையடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் அணி வீரர்கள் இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறினர். 12வது ஓவரில் பாகிஸ்தான் 77/6 ரன்கள் எடுத்தது. கடைசி ஓவரில் பாகிஸ்தான் கோப்பையை கைப்பற்ற 13 ரன்கள் தேவை என்ற நிலையில் ஆட்டம் வியத்தகு உச்சத்தை எட்டியது. கடைசி ஓவரை ஜோகிந்தர் சர்மா வீசினார். கடைசி நான்கு பந்துகளில் 6 ரன்கள் தேவைப்பட்டதால், ஒரு கணத்தில், பாகிஸ்தான் ஒரு சாதகமான நிலையைக் கண்டது. ஆனால் ஸ்கூப் ஷாட் முயற்சியில் மிஸ்பா-உல்-ஹக் ஆட்டமிழக்க இந்தியாவின் வெற்றியை உறுதிப்படுத்தியது.
பாகிஸ்தானுக்கு எதிரான இறுதிப் போட்டியில் இந்திய அணி சார்பில் ஆர்.பி.சிங் மற்றும் இர்பான் பதான் ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினர். ஜோகிந்தர் ஷர்மா இரண்டு முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தினார். முக்கியமான ஆட்டத்தில் 3 விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய ஆல்-ரவுண்டர் இர்பான் பதான் ஆட்ட நாயகன் விருது பெற்றார்.
நீண்ட காத்திருப்புக்குப் பிறகு, இந்த ஆண்டின் தொடக்கத்தில் பார்படாஸில் நடந்த டி20 உலகக் கோப்பையை இந்தியா இரண்டாவது முறையாக வென்றது. ரோஹித் சர்மா தலைமையில், இந்திய கிரிக்கெட் அணி 2024 டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்காவை 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி கோப்பையை வென்றது குறிப்பிடத்தக்கது.
Readmore: தோற்றால் மீண்டும் அதிபர் தேர்தலில் போட்டியிட மாட்டேன்!. டிரம்ப் அதிரடி!