'வழிக்கு வந்தது LAYS..' சூரியகாந்தி எண்ணெயை பயன்படுத்தி சிப்ஸ் தயாரிக்க முடிவு!
இந்தியர்களின் விருப்பமான உருளைக்கிழங்கு சிப்ஸ் பிராண்ட் ஆன லேஸில் பாமாயில் பயன்படுத்தப்படுவதாக சர்ச்சை எழுந்தது. இதனை அடுத்து அந்த நிறுவனம் சூரியகாந்தி எண்ணெய் பயன்படுத்தி சிப்ஸ் தயாரிப்பதற்கான பரிசோதனையில் ஈடுபட்டுள்ளது.
பெப்சிகோ இந்தியா நிறுவனத்தின் உருளைக்கிழங்கு சிப்ஸ் பிராண்டான லேஸ் சிப்ஸ் இந்தியாவில் மிகவும் பிரமபலமாக இருக்கிறது. இந்த லேஸ் சிப்சை பாமாயில் கொண்டு தயாரித்து வருகின்றனர். பொதுவாகவே பாமாயில் கொண்டு தயாரிக்கப்படும் உணவுப்பொருட்கள் ஆரோக்கியமற்றது என்று இந்திய மக்களிடம் நம்பப்பட்டு வருகிறது.
இதே பெப்சிகோ நிறுவனம் அமெரிக்காவில் விற்பனை செய்யும் லேஸ் உருளைக்கிழங்கு சிப்ஸ்களை தயாரிப்பதற்கு இதயத்திற்கு உகந்த எண்ணெயாக கருதப்படும் சூரியகாந்தி எண்ணெய், மக்காச்சோளம் மற்றும் கேனோலா எண்ணெய்களை பயன்படுத்துகிறது. ஆனால் இந்தியாவில் மட்டும் பாமாயிலை பயன்படுத்தி வருகிறது. இது வெளிச்சத்துக்கு வந்ததால் லேஸ் நிறுவனத்திற்கு எதிராக பல்வேறு குற்றசாட்டுகள் எழுந்தன.
இதனை அடுத்து இந்தியாவிலும் சூரியகாந்தி எண்ணையை பயன்படுத்தி சிப்ஸ்களை தயாரிப்பதற்கான சோதனைகளில் ஈடுபட்டிருப்பதாக பெப்சிகோ நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் லேசில் அதிக அளவிலான உப்பு இருப்பதாக செய்தி வெளியான நிலையில், தங்கள் நிறுவன திண்பண்டங்களில் உப்பின் அளவை ஒரு கல்லோரிக்கு 1.3 மில்லி கிராம் என்ற அளவில் குறைத்து வருவதாகவும் 2025 ஆம் ஆண்டுக்குள் இது எட்டப்பட்டு விடும் என்றும் பெப்சிகோ நிறுவனம் அறிவித்துள்ளது.
அந்த வகையில் பெரும்பாலான திண்பண்டங்களை தயாரிக்க கூடிய நிறுவனங்கள் பாமாயிலை பயன்படுத்துவதாகவும், சூரியகாந்தி மற்றும் சோயாபீன் எண்ணெயை விட பாமாயிலின் விலை குறைவாக இருப்பதால் அவை இவற்றை பயன்படுத்துவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
நெஸ்ட்லே நிறுவனத்தின் குழந்தைகளுக்கான பவுடரில் அதிக அளவு சர்க்கரை இருப்பது அண்மையில் கண்டறியப்பட்டது. சமீபகாலமாக இந்தியாவில் வெளிநாட்டு நிறுவனங்களின் தயாரிப்புகளில் உள்ள குறைபாடுகளை சமூகவலைதளங்களை சேர்ந்த சில இன்ஃப்ளூயன்சர்கள் வெளிப்படுத்தி வருகின்றனர். இது நாட்டிற்கே அவர்கள் செய்யக்கூடிய பெரிய சேவையாக அமைந்துள்ளது.