பெண்களுக்கு மிகவும் ஆபத்தான இடம் அவர்களது வீடு..!! - ஐநா அறிக்கை
வீட்டின் நிர்வாகி, குடும்பத்தின் விளக்கு என்றெல்லாம் பெண்களை வீட்டோடு தொடர்புபடுத்தி பெருமையாகப் பேசிவரும் நிலையில், பெண்கள் வாழ்வதற்கு மிகவும் ஆபத்தான இடம் வீடு தான் என்று ஐ.நா. தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது அதிர்ச்சி அளிக்கிறது.
பெண்களுக்கு எதிரான வன்முறை என்பது உலகம் முழுவதும் நடந்து வரும் தொடர்ச்சியான பிரச்னையாகும். குடும்ப வன்முறை அல்லது பாலியல் வன்முறை அல்லது கொலை என எதுவாக இருந்தாலும், உலகில் எல்லா இடங்களிலும் பெண்கள் பிரச்னைகளையும் துஷ்பிரயோக பயத்தையும் எதிர்கொள்கின்றனர். பெண்களுக்கான வழிகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஒவ்வொரு ஆண்டும் பெண்களுக்கு எதிரான வன்முறையை ஒழிப்பதற்கான சர்வதேச தினம் கொண்டாடப்படுகிறது.
இந்த தினத்தை முன்னிட்டு, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்து ஐ.நா அலுவலகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அறிக்கையின்படி, பெண்களுக்கான கொடிய இடமாக வீடு உள்ளது. கடந்த 2023ஆம் ஆண்டில் சுமார் 51 ஆயிரம் பெண்கள் மற்றும் சிறுமிகள் அவர்களது வாழ்க்கைத் துணை அல்லது குடும்ப உறுப்பினர்களால் கொலை செய்யப்பட்டிருப்பதாக, ஐக்கிய நாடுகள் அவையின் பெண்கள் அமைப்பும், போதைப்பொருள் மற்றும் குற்றத்திற்கான ஐக்கிய நாடுகள் அலுவலகமும் இணைந்து வெளியிட்ட தரவுகள் மூலம் தெரிய வந்துள்ளது.
சர்வதேச பெண்களுக்கான வன்முறை ஒழிப்பு நாளை முன்னிட்டு வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கை மற்றொன்றையும் தெரிவித்துள்ளது. அதாவது, பெண்கள் கொலை செய்யப்படுவது அதிகரிக்கவில்லை, மாறாக, கொலை செய்யப்படும் பெண்களின் தகவல்கள் கிடைப்பது அதிகரித்துள்ளது என்று விளக்கியிருக்கிறது. பாலின ரீதியாக பெண்கள் மற்றும் சிறுமிகள் மீது நடக்கும் இதுபோன்ற மிகக் கொடூரமான வன்முறைகள் எல்லா இடங்களிலும் தொடர்வதாகவும், எந்த ஒரு மாகாணமும் இதற்கு விதிவிலக்கு அல்ல என்றும், இந்தக் காலக்கட்டத்தில் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு வீடுதான் மிகவும் அபாயகரமான இடமாக மாறியியிருக்கிறது என்றும் கூறப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு நடந்த இந்தப் படுகொலையில் ஆப்ரிக்கா முதலிடத்தில் உள்ளது. கணவர் அல்லது குடும்பத்தினரால் கடந்த 2023ல் மட்டும் ஆப்ரிக்காவில் 21,700 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இது மட்டுமல்லாமல் 1 லட்சம் பெண்களில் 2.9 பெண்கள் பாதிக்கப்பட்டிருப்பதால், விகிதத்திலும் ஆப்ரிக்காவே முதலிடத்தில் உள்ளதாம். பொதுவாக கொலை செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கையை எடுத்துக்கொண்டால், 2023ஆம் ஆண்டு நடந்த ஒட்டுமொத்த கொலையில் 80 சதவீதம்பேர் ஆண்கள். 20 சதவீதம்பேர் பெண்கள்.
ஆனாலும், குடும்ப வன்முறை தொடர்பான குற்றங்களில் ஆண்களை விடவும் பெண்களே அதிகம் கொலை செய்யப்படுவதாகவும், உள்நோக்கத்தோடு, வாழ்க்கைத்துணை அல்லது குடும்பத்தில் ஒருவரால் கொலை செய்யப்பட்டவர்களில் 60 சதவீதம் பேர் பெண்கள்தான் என்றும் அறிக்கை ஒரு பகிரங்க தகவலை வெளியிட்டுள்ளது. குடும்ப வன்முறையைத் தடுப்பதற்கும், பெண்கள் மற்றும் சிறுமிகளைப் பாதுகாப்பதற்கும் உரிய நேரத்தில் மற்றும் பயனுள்ள தலையீடுகளை மேற்கொள்ளுமாறு நாடுகளை ஐ.நா முகமைகள் வலியுறுத்துகின்றன.