ஹஜ் பயணத்தில் பலியான 4 தமிழர்களின் உடல் சவூதியில் அடக்கம்!! ; குடும்பத்தினர் ஒப்புதல்!!
ஆண்டுதோறும் சவுதி அரேபியாவில் உள்ள மெக்காவில் லட்சக்கணக்கான இஸ்லாமியர்கள் புனித ஹஜ் பயணம் மேற்கொள்வது வழக்கம். அதேபோல், இந்தாண்டும் உலகம் முழுவதிலும் இருந்து 18 லட்சம் பேர் மெக்கா சென்றுள்ளனர். இஸ்லாமியர்களின் பண்டிகையான பக்ரீத் எனும் தியாகத் திருநாளை கொண்டாடும் விதமாக ஜூன் 14ம் தேதி முதல் மெக்காவில் புனித யாத்திரை தொடங்கியது. இதில் இந்தியாவின் பல மாநிலங்களில் இருந்தும் 1.75 பேர் சவுதி அரேபியா சென்றுள்ளனர். சவுதி அரேபியாவில் கடந்த 16ம் தேதி பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட்டது.
இந்நிலையில், சவுதி அரேபியாவில் நிலவும் கடுமையான வெப்ப சலனம் காரணமாக, நூற்றுக் கணக்கான ஹஜ் பயணிகள் உயிரிழந்துள்ளனர். அதன்படி இதுவரை மொத்தம் 900க்கும் அதிகமான ஹஜ் பயணிகள் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இவர்களில் எகிப்து நாட்டைச் சேர்ந்தவர்கள் என சொல்லப்படுகிறது. அதுமட்டும் இல்லாமல் 1400க்கும் மேற்பட்ட எகிப்து நாட்டினரை தொடர்புகொள்ள முடியவில்லை எனவும் கூறப்படுகிறது.
இந்தியாவில் இருந்து 1.75 லட்சம் பேர் ஹஜ் பயணம் மேற்கொண்ட நிலையில், இதுவரை 80 பேர் வெப்பம் தாங்காமல் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இதில் தமிழ்நாட்டை சேர்ந்த 4 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் உயிரிழந்தவர்களின் உடல்களை சவூதியிலே அடக்கம் செய்ய அவர்களுடைய குடும்பத்தினர் ஒத்துக் கொண்டுள்ளனர்.
தமிழ்நாட்டை சேர்ந்த உயிரிழந்தவர்களின் விவரம்;
1. ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த ரசிக்கா பீவி (73).
2. திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த மைதீன் பாத்து (73)
3. சென்னையை சேர்ந்த நசீர் அஹமது (40)
4. கரூர் மாவட்டத்தை சேர்ந்த லியாக்கத் அலி (72).