முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

நெல் கொள்முதல் விலை குவிண்டாலுக்கு ரூ.3000 ஆக உயர்த்தி நிர்ணயிக்க வேண்டும்...!

05:30 AM May 22, 2024 IST | Vignesh
Advertisement

நெல் கொள்முதல் விலை குவிண்டாலுக்கு ரூ.3000 ஆக உயர்த்தி நிர்ணயிக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

Advertisement

இது குறித்து அவர் தனது அறிக்கையில்; தமிழ்நாட்டில் நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் மூலம் கொள்முதல் செய்யப்படும் நெல்லின் அளவு கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது நடப்பாண்டில் ஏறக்குறைய 10 லட்சம் டன் அளவுக்கு குறைந்திருக்கிறது. வேளாண்மையை வருவாய் ஆதாரமாகக் கொண்ட மக்கள் அதிகம் வாழும் தமிழகத்தில் நெல் கொள்முதல் அளவு நான்கில் ஒரு பங்குக்கும் மேலாக குறைந்திருப்பதை எளிதில் கடந்து செல்ல முடியாது. இதற்கான காரணங்களை கண்டறிந்து அவற்றை சரி செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

2021-22ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் 43.27 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டது. 2022-23ஆம் ஆண்டில் மே மாதம் 15-ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் 37 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டது. நடப்பாண்டின் இதே காலத்தில் 3.71 லட்சம் உழவர்களிடமிருந்து 27.61 லட்சம் டன் நெல் மட்டுமே கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு முழுவதும் கணக்கில் கொண்டால் 44.22 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டது. நடப்பு கொள்முதல் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை உள்ளது என்றாலும் கூட இனிவரும் மாதங்களில் பெரிய அளவில் நெல் கொள்முதல் செய்யப்படுவதற்கு வாய்ப்பு இல்லை. கடந்த இரு ஆண்டுகளின் நெல் கொள்முதல் அளவை நெருங்குவதற்குக் கூட வாய்ப்பு இல்லை. நெல் கொள்முதல் அளவு குறைந்து வருவது கவலை அளிக்கிறது.

2023-24ஆம் ஆண்டில் மொத்தம் 50 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆகஸ்ட் மாதத்தின் இறுதியில் இலக்கில் 60 விழுக்காட்டைக் கூட அரசால் எட்ட முடியாது என்பது தான் உண்மை. கடந்த சில ஆண்டுகளுடன் ஒப்பிடும் போது நடப்பாண்டில் காவிரியில் கர்நாடகம் தண்ணீர் திறக்கவில்லை என்பதால் பாசனப் பரப்பு கணிசமாக குறைந்தது. ஆனால், நெல் கொள்முதல் அளவு குறைந்ததற்கு இதை மட்டுமே காரணமாகக் கூற முடியாது.

ஒரு குவிண்டால் நெல்லுக்கு குறைந்தது ரூ.3000 கொள்முதல் விலை வழங்க வேண்டும் என்பது தான் உழவர்களின் கோரிக்கை ஆகும். ஆனால், மத்திய அரசு நிர்ணயித்த கொள்முதல் விலையுடன் தமிழக அரசு முறையே ரூ.100, ரூ.75 ஊக்கத்தொகை சேர்த்து சன்னரக நெல்லுக்கு ரூ.2310, சாதாரண ரக நெல்லுக்கு ரூ.2265 வீதம் மட்டுமே கொள்முதல் விலை வழங்குகிறது. இந்த விலைக்கு உழவர்கள் நெல்லை விற்க கொள்முதல் நிலையங்களில் பல நாட்கள் காத்துக்கிடக்க வேண்டியுள்ளது. அதுமட்டுமின்றி, கொள்முதல் நிலையப் பணியாளர்களுக்கு மூட்டைக்கு ரூ.60 வரை கையூட்டு வழங்க வேண்டியுள்ளது.

அரசின் நெல் கொள்முதல் அளவு குறைந்தால் அரசுக்கு ஊக்கத்தொகை வழங்குவது மிச்சமாகும். அதை நினைத்து அரசு மனநிறைவு அடையக் கூடாது. இதே நிலை தொடர்ந்தால், தமிழக அரசு பொதுவினியோகத் திட்டத்தின் மூலம் நியாயவிலைக் கடைகளில் வழங்க போதிய அரிசி கிடைக்காத நிலை ஏற்படும். அதனால் வெளிச்சந்தையில் அரிசி விலை பெருமளவில் உயரும். ஏழை, எளிய மக்களால் அரிசியை வாங்க முடியாத நிலை உருவாகும். அது உணவுப் பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தும்.

இதை உணர்ந்து தமிழ்நாட்டில் நெல் கொள்முதல் அளவு குறைந்ததற்கான காரணங்கள் என்னென்ன? என்பதை அரசு ஆய்வு செய்து குறைகளைக் களைய வேண்டும். முதல் நடவடிக்கையாக நெல் கொள்முதல் விலையை குவிண்டாலுக்கு ரூ.3000 ஆக உயர்த்தவும், நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கு உழவர்கள் சென்றால் உடனடியாக நெல் மூட்டைகளை விற்பனை செய்து, பணத்தைப் பெறவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.

Advertisement
Next Article