இது போன்ற காட்டுமிராண்டிக்கு யாரும் வாதாட வராதீங்க... அமைச்சர் அன்பில் மகேஷ் காட்டம்...!
இது போன்ற காட்டுமிராண்டித்தனமான செயல்களில் ஈடுபடுபவர்களுக்காக யாரும் வாதாட வராதீர்கள். இவர்கள் எல்லாம் தண்டனைக்கு உரியவர்கள் ஆசிரியை ரமணியை கொலை செய்தவருக்கு கொடுக்கப்படும் தண்டனை என்பது கடுமையாக இருக்க வேண்டும் என அமைச்சர் அன்பில் மகேஷ் கருத்து தெரிவித்துள்ளார்.
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே மல்லிபட்டினம் எனும் கிராமத்தில் அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் தற்காலிக ஆசிரியராக பணியாற்றி வந்த ரமணி (26) என்பவர், மதன் (30) என்பவரால் இன்று பள்ளி வளாகத்திலேயே கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் ஆசிரியர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தநிலையில் படுகொலை நிகழ்ந்த பள்ளியில் தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் மற்றும் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர். பின்னர் செய்தியாளர்கள் பேசிய அமைச்சர்; நடக்க கூடாத சம்பவம் நடந்து விட்டது. தற்காலிக ஆசிரியர் என்றாலும் இவரும் எங்கள் ஆசிரியர்தான். இது ஒரு எதிர்பாராத வித சம்பவம் சொந்தப் பிரச்சினையாக இருந்தாலும் சரி, பள்ளி வளாகத்திற்குள் வந்து செய்தது ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று.
இது போன்ற காட்டுமிராண்டித்தனமான செயல்களில் ஈடுபடுபவர்களுக்காக யாரும் வாதாட வராதீர்கள். இவர்கள் எல்லாம் தண்டனைக்கு உரியவர்கள். இவருக்கு கொடுக்கப்படும் தண்டனை என்பது நீதிமன்றத்திற்கு வரும்பொழுது ஒட்டுமொத்த தமிழ்நாட்டிற்கு ஒரு மனிதநேயத்தை காக்கக்கூடியதாக இருந்திட வேண்டும். இந்த செயலின் மூலம் மாணவர்களுக்கு ஒரு அச்சம் வரும். மீண்டும் அந்த மாணவர்கள் பள்ளிக்கு வரும் பொழுது அச்ச உணர்வு இருக்கக் கூடாது என்பதற்காக தான் இந்த வாரம் முழுவதும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. இதனால் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ஒரு பொதுவான இடத்தில் வைத்து வரும் திங்கட்கிழமை கவுன்சிலிங் வழங்கப்பட உள்ளது என்றார்.