தேவாலயத்தில் வெடித்த பிரச்சனை..!! பாஜக தலைவர் அண்ணாமலை மீது பாய்ந்தது வழக்கு..!!
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மீது தருமபுரி போலீசார் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
தமிழ்நாடு முழுவதும் பாதயாத்திரை மேற்கொண்டு வரும் அண்ணாமலை, கடந்த ஜனவரி 7, 8ஆம் தேதிகளில் தருமபுரி மாவட்டத்தில், 'என் மண் என் மக்கள்' நடைபயணம் மேற்கொண்டார். 8ஆம் தேதி தருமபுரி பொம்மிடியை அடுத்த பி.பள்ளிப்பட்டி பகுதியில் நடைபயணம் சென்றபோது அங்குள்ள லூர்து அன்னை ஆலயத்தில் லூர்து அன்னைக்கு மாலை அணிவிக்கச் சென்றார். அப்போது, அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் அண்ணாமலையை தடுத்தனர்.
"மணிப்பூர் கலவரத்தில் கிறிஸ்தவ மக்கள் பலியாகவும், தேவாலயங்கள் இடிக்கப்பட்டதற்கும் அங்குள்ள பாஜக அரசு தான் காரணம். ஆகையால், புனித இடமான எங்கள் தேவாலயத்துக்குள் நீங்கள் வரக்கூடாது" என்று கூறி அண்ணாமலையிடம் வாக்குவாதம் செய்தனர். அப்போது அண்ணாமலை, "தேவாலயம் என்ன உங்கள் பெயரில் உள்ளதா? தேவாலயத்துக்கு வர அனைவருக்கும் உரிமை உள்ளது. மணிப்பூரில் நடந்தது இரு பழங்குடியினங்களுக்கு இடையிலான மோதல்.
என்னை தடுத்தால் இங்கே 10,000 பேரை வரவழைத்து தர்ணாவில் ஈடுபடுவேன்" என்று வாக்குவாதம் செய்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்ட நிலையில், போலீசார் அந்த இளைஞர்களை அங்கிருந்து அகற்றினர். பின்னர், அண்ணாமலை தேவாலயத்தில் வழிபாடு நடத்திச் சென்றார். இந்நிலையில், இந்தச் சம்பவம் தொடர்பாக பொம்மிடி காவல் நிலையத்தில் கார்த்திக் (28) என்ற இளைஞர் அளித்த புகாரின் பேரில் அண்ணாமலை மீது பொம்மிடி போலீசார், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல், வெவ்வேறு வகுப்புகளிடையே பகை மற்றும் வெறுப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கதுடன் பேசியது உள்ளிட்ட 3 சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.