Manjolai | ஹேப்பி நியூஸ் மாஞ்சோலை மக்களே.. குடியிருப்புகளை காலி செய்ய வேண்டாம்!! - பிபிடிசி அறிவிப்பு
மாஞ்சோலை மக்கள் குடியிருப்புகளை காலி செய்ய வேண்டாம் என தனியார் எஸ்டேட் நிறுவனம் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது. மறு உத்தரவு வரும் வரை குடியிருப்புகளை காலி செய்ய வேண்டாம் என எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே இயற்கை எழில் கொஞ்சும் மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள மாஞ்சோலை காக்காச்சி, ஊத்து, நாலுமுக்கு ஆகிய பகுதிகளில் தேயிலை எஸ்டேட் அமைந்துள்ளது. இங்கு 2000க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தங்கியிருந்து பணிபுரிகின்றனர்.
1929 ஆம் ஆண்டு மாஞ்சோலை தேயிலை தோட்டங்கள் பர்மா டிரேடிங் கார்ப்பரேஷன் என்ற தனியார் நிறுவனத்திற்கு 99 ஆண்டுகள் குத்தகைக்கு விடப்பட்டது குறிப்பிடத்தக்கது. 2028 ஆம் ஆண்டில் இந்த நிறுவனத்தின் குத்தகை முடிவடையவுள்ளது. ஆனால் குத்தகை காலம் முடிவடைவதற்கு முன்பாகவே தனியார் நிறுவனம் தேயிலை தோட்டத்தை காலி செய்ய முடிவு செய்துள்ளது. இதற்காக அங்கு பல தலைமுறைகளாக வாழ்ந்து வரும் தொழிலாளர்களை விருப்ப பணி ஓய்வு பெற கட்டாயப்படுத்தப்பட்டனர்.
இந்நிலையில், மாஞ்சோலை மக்கள் குடியிருப்புகளை காலி செய்ய வேண்டாம் என தனியார் எஸ்டேட் நிறுவனம் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது. மறு உத்தரவு வரும் வரை குடியிருப்புகளை காலி செய்ய வேண்டாம் என எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில் 'உயர்நீதிமன்ற மதுரைக் கிளை பிறப்பித்த இடைக்கால உத்தரவின்படி 75% கருணைத் தொகையை நிறுவனம் 3 நாட்களுக்குள் உதவி தொழிலாளர் ஆணையர் தோட்டங்கள்) நாகர்கோவில் அவர்களிடம் டெபாசிட் செய்யப்படும். தொழிலாளர்கள் தங்களது கோரிக்கையை சமர்ப்பித்து மீதமுள்ள 75% கருணைத் தொகையை உதவி தொழிலாளர் ஆணையர் (தோட்டங்கள்) நாகர்கோவில் இடமிருந்து பெற்றுக்கொள்ளலாம்.
மேலும், தற்போதைய நிலையை தொடரவும், சம்பந்தப்பட்ட எஸ்டேட்டில் இருந்து தொழிலாளர்களை கட்டாயமாக வெளியே அனுப்பக் கூடாது என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எனவே நீதிமன்றத்தின் மறு உத்தரவு வரும் வரை குடியிருப்புகளை காலி செய்வது தொடர்பாக தீர்வு ஒப்பந்தத்தில் (MOS) குறிப்பிடப்பட்டுள்ள விதிமுறைகள் தளர்வு செய்யப்பட்டுள்ளது' என்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது அத்தொழிலாளர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.