இந்தியாவில் வளர்ந்த மாநிலங்களின் பட்டியலில் மகாராஷ்டிரா முதல் இடம்..!! தமிழகத்திற்கு எந்த இடம் தெரியுமா?
ஒவ்வொரு 10 ஆண்டுகளை ஒப்பிட்டு இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி எப்படி உள்ளது என்பது குறித்து பிரதமருக்கான பொருளாதார ஆலோசனைக்குழு மத்திய அரசுக்கு அறிக்கை வெளியிட்டு வருகிறது. இந்த பட்டியல் தற்போது வெளியாகி உள்ளது. அதில் தமிழ்நாடு 3-வது இடத்தை பிடித்துள்ளது.
2023-24-ம் நிதியாண்டின் பொருளாதாரம் மற்றும் தனிநபர் வருமானத்தில் ஏற்பட்டுள்ள வளர்ச்சி மாநில வாரியாக எப்படி உள்ளது? என்ற விவரங்களை பிரதமருக்கான பொருளாதார ஆலோசனைக்குழு உறுப்பினர்களான சஞ்சீவ் சன்யால் (பொருளாதார மேதை), ஆகன்க்ஷா அரோரா (நிதி ஆயோக் துணை இயக்குனர்) ஆகியோர் அடங்கிய குழு ஆய்வு மேற்கொண்டு இந்த மாதம் (செப்டம்பர்) மத்திய அரசிடம் அளித்திருக்கிறார்கள்.
2023-24-ம் நிதியாண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 30 சதவீத பங்களிப்பை தென்மாநிலங்களான தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்கள் அளித்திருப்பது அறிக்கையில் தெரிய வந்துள்ளது. தனிநபர் வருமானத்தை பொறுத்தமட்டில் தேசிய சராசரியை ஒப்பிடும்போது தென் மாநிலங்கள் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை எட்டியிருக்கிறது என்பது புள்ளி விவரம் மூலம் தெரிய வந்துள்ளது.
பிரதமருக்கான பொருளாதார ஆலோசனைக்குழு மத்திய அரசுக்கு அளித்த அறிக்கையில், 'தமிழகத்தை பொறுத்தமட்டில் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் இந்தியாவில் உள்ள மாநிலங்களில் 3-வது இடத்தில் இருப்பது தெரியவந்துள்ளது. முதல் இடத்தில் மகாராஷ்டிரா மாநிலம் இருக்கிறது. இந்த மாநிலம் 13.3 சதவீதத்துடன் முதலிடத்தில் உள்ளது. ஆந்திரா 9.7 சதவீதத்துடன் 2-வது இடத்திலும், தமிழகம் 8.9 சதவீதத்துடன் 3-வது இடத்திலும் உள்ளன.
அதேநேரம் 1991-ம் ஆண்டுக்கு முன்பு இந்தியாவின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் தென்மாநிலங்களின் பங்களிப்பு இப்போது இருப்பது இருந்தது இல்லை.. ஆனால் 1991-ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட பொருளாதார தாராளமயமாக்கல் கொள்கைக்கு பிறகு ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் தென்மாநிலங்கள் மிகப்பெரிய முன்னேற்றத்தை அடைந்துள்ளன.
இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களும் சராசரி வளர்ச்சியை எட்டி இருக்கின்றன. மேற்கு வங்கம் உள்ளிட்ட சில மாநிலங்கள் மட்டும் பின்னடைவை சந்தித்திருப்பது தெரியவந்துள்ளது. அதாவது, 1961-ம் ஆண்டு மேற்கு வங்கத்தில் 10.5 சதவீதமாக இருந்த ஒட்டுமொத்த உற்பத்தி தற்போது 5.6 சதவீதமாக குறைந்திருக்கிறது.
ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது தென்மாநிலங்கள், மகாராஷ்டிரா, குஜராத் உள்ளிட்ட மேற்கு மாநிலங்கள் மற்ற மாநிலங்களைவிட சிறப்பாக செயல்படுகின்றன. வடமாநிலங்களில் சில பகுதிகளில் மட்டும் குறிப்பிடத்தக்க வளர்ச்சி பெற்றுள்ளன. அதேநேரம் மேற்கு வங்கம் உள்ளிட்ட கிழக்கு மாநிலங்களில் வளர்ச்சி கவலை அளிக்கும் வகையில் உள்ளது.
தனிநபர் வருமானத்தை பொறுத்தவரை டெல்லி, தெலுங்கானா, கர்நாடகா மற்றும் ஹரியானாவில் மிக அதிகமாக உள்ளன. தனிநபர் வருமானம் என்பது பீகாரில் மிகக் குறைவாகவும் உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 2023-24 ஆம் ஆண்டு நிலவரப்படி, டெல்லியின் தனிநபர் வருமானம் 250.8 சதவீதமாக இருக்கிறது. இது சராசரி வருமானம் நாட்டின் சராசரியை விட 2.5 மடங்கு அதிகமாகும்.
தெற்கில், கர்நாடகா மற்றும் தெலுங்கானா ஆகியவை 1991-ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட பொருளாதார தாராளமயமாக்கல் கொள்கைக்கு பின்னர் மிகப்பெரிய பொருளாதார சக்திகளாக உருவெடுத்துள்ளதாக ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கர்நாடகாவின் பங்கு 2000-01ல் 6.2 சதவீதத்தில் இருந்து 2023-24ல் 8.2 சதவீதமாக அதிகரித்துள்ளது என்றும் ஆனால் 1960-61ல் 5.4 சதவீதமாக மட்டுமே இருந்தது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read more ; அட்ராசக்க.. மீண்டும் குறைந்த தங்கம் விலை..!! இன்றைய ரேட் என்ன தெரியுமா?