ஷாக்...! உச்சத்திற்கு சென்ற தக்காளி விலை.. 1 கிலோ 70 ரூபாய்க்கு விற்பனை...!
கோயம்பேடு சந்தையில் தக்காளி விலை கிலோ 70 ரூபாயை தாண்டியது.
கோயம்பேடு மொத்த சந்தையில் ஒரு கிலோ தக்காளியின் விலை கடந்த வாரத்தில் ரூ.20-லிருந்து ரூ.40 உயர்ந்து தற்பொழுது ரூ.60-ஐ எட்டியது. மழையால் பழங்கள் சேதம் அடைந்துள்ளதாக விற்பனையாளர்கள் குற்றம்சாட்டினர். மேலும், பெங்களூர் தக்காளி மற்றும் ஹைபிரிட் தக்காளி 70 ரூபாய்க்கு கடந்த வாரம் 30 ரூபாய்க்கு விற்கப்பட்டது.
இந்த விகிதங்கள் மாறாமல் இன்னும் ஒரு மாதத்திற்கு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காய்கறிகளை விற்பனை செய்யும் ஆன்லைன் தளங்களில் நாட்டு தக்காளிக்கு ரூ.90, ஹைப்ரிட் தக்காளிக்கு ரூ.108, ஆர்கானிக் சான்றளிக்கப்பட்ட தக்காளிக்கு ரூ.190, செர்ரி தக்காளிக்கு ரூ.200 என விற்பனை செய்யப்படுகிறது.
மழையால் தக்காளி சாகுபடி பாதிக்கப்பட்டு, விலைவாசி உயர்ந்துள்ளது. பல இடங்களில் தக்காளி சேதமடைந்துள்ளது. 75 சதவீத வரத்து ஆந்திரா மற்றும் கர்நாடகாவில் இருந்து வருகிறது. அங்கு பருவமழை முன்கூட்டியே துவங்கியது. இதனால் இனி வரும் நாட்களில் தக்காளி விலை மேலும் உயரக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. தக்காளி விலையை உடனடியாக கட்டுப்படுத்த தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.