செக்...! இனி மஞ்சள் தூள், வாழைப்பழம் உள்ளிட்ட 38 பொருட்களின் விலை கண்காணிக்கப்படும்...! மத்திய அரசு அறிவிப்பு...!
சீரகம், சிவப்பு மிளகாய், மஞ்சள் தூள், வாழைப்பழம் உள்ளிட்ட 16 பொருட்கள் விலை கண்காணிப்பின் கீழ் சேர்க்கப்பட்டுள்ளன.
மத்திய அரசின் நுகர்வோர் விவகாரங்கள் துறை, 2024ஆகஸ்ட் 1 முதல் விலை கண்காணிப்பின் கீழ் 16 கூடுதல் பொருட்களை சேர்த்துள்ளதாக மத்திய நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகம் மற்றும் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித்துறை அமைச்சர் திரு பிரல்ஹாத் ஜோஷி, இன்று விலை கண்காணிப்பு நடைமுறை 4.0 செல்போன் செயலியை அறிமுகப்படுத்தும் போது தெரிவித்தார். ஏற்கனவே 22 பொருட்கள் தினசரி விலை கண்காணிப்பின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன. இனி 38 பொருட்களின் விலை கண்காணிக்கப்படும்.
34 மாநிலங்கள் யூனியன் பிரதேசங்களில் உள்ள 550 மையங்களில் தினசரி விலைகளை நுகர்வோர் விவகாரங்கள் துறை கண்காணித்து வருகிறது. நுகர்வோர் விலக்குக் குறியீடு தொடர்பான அரசு, இந்திய ரிசர்வ் வங்கி மற்றும் பகுப்பாய்வாளர்களுக்கான கொள்கை முடிவுகளுக்கான முன்கூட்டிய உள்ளீடுகளை, இத்துறையால் கண்காணிக்கப்படும் விலைத் தரவுகள் வழங்குகின்றன. கம்பு, சோளம், கேழ்வரகு, ரவை, மைதா, கடலை மாவு, நெய், வெண்ணெய், கத்தரி, முட்டை, கருப்பு மிளகு, மல்லி, சீரகம், சிவப்பு மிளகாய், மஞ்சள் தூள் மற்றும் வாழைப்பழம் ஆகிய 16 பொருட்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
சமீப காலமாக உணவுப் பொருட்களின் விலை பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பாரத கடலைப் பருப்பு கிலோ ரூ.60-க்கு வழங்குவதும் இதில் அடங்கும்; சில்லறை நுகர்வோருக்கு பாரத் ஆட்டா கிலோ ரூ.27.50 ஆகவும், பாரத் அரிசி கிலோ ரூ.29 ஆகவும் உள்ளது. தேசிய நுகர்வோர் கூட்டுறவு இணையம் 29 ஜூலை 2024 முதல் சில்லறை, நுகர்வோருக்கு கிலோ ரூ.60-க்கு தக்காளி சில்லறை விற்பனையை தொடங்கியுள்ளது. பதுக்கலைத் தடுக்க, துவரம் பருப்பு மற்றும் தேசி கொண்டைக்கடலைக்கு 21 ஜூன் 2024 முதல் 30 செப்டம்பர் 2024 வரை இருப்பு வரம்புகள் விதிக்கப்படுகின்றன.
மேலும் துவரம் பருப்பு, உளுந்து, மசூர், மஞ்சள் பட்டாணி மற்றும் நாட்டு கொண்டைக்கடலை உள்ளிட்ட பருப்பு வகைகளை வரி ஏதுமின்றி இறக்குமதி செய்து உள்நாட்டு விநியோகத்தை அதிகரிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. எளிதில் கிடைப்பது மற்றும் மலிவு விலையை உறுதி செய்வதற்காகவும் பற்றாக்குறை மாதங்களில் விடுவிப்பதற்காகவும் 5 லட்சம் மெட்ரிக் டன் இருப்பு வைக்கப்பட்டுள்ளது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.