வல்லமை தரும் வல்லாரை கீரை..!! இத்தனை மருத்துவ குணங்கள் கொண்டதா..? எப்படி சாப்பிட வேண்டும்..?
பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் மிகுந்து காணப்படும் வல்லாரை கீரையின் மருத்துவ குணங்களும், அதனை சாப்பிடும் முறை குறித்தும் இந்தப் பதிவில் தெரிந்து கொள்வோம்.
வல்லமை மிக்க கீரை என்பதால் இது வல்லாரை எனப்பெயர் பெற்றது. வல்லாரை ஞாபக சக்தியை மேம்படுத்துவதால், இது சரஸ்வதி கீரை என்றும் அழைக்கப்படுகிறது. வல்லாரையில் இரும்புச்சத்து, சுண்ணாம்புச்சத்து, வைட்டமின் A, C மற்றும் தாது உப்புக்கள் ஏராளமாக அடங்கியுள்ளன. இரத்தத்திற்கு தேவையான சத்துக்களை, இந்த கீரை சரியான அளவில் கொண்டுள்ளது.
வல்லாரையை காலை நேரத்தில், பறித்த சில மணி நேரங்களில், பச்சையாக நன்கு மென்று சாப்பிட்டு வந்தால், மூளை மிகுந்த சுறுசுறுப்படையும். காலை வேளையில், பறித்த சில மணி நேரங்களில், ஒருகைப்பிடியளவு வல்லாரை கீரையைப் பச்சையாக நன்கு மென்று சாப்பிட்ட பின், பசும்பாலை குடித்து வந்தால், மாலைக்கண் நோய் குணமாகும். காலை நேரத்தில் வல்லாரையை மிளகுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் உடற்சூடு தணியும். வல்லாரை சாப்பிடும் காலங்களில் இறைச்சி, அகத்திக் கீரை, பாகற்காய் ஆகியவற்றை சாப்பிடக்கூடாது.
மேலும், புளி மற்றும் காரம் அதிகமாக சேர்த்து கொள்ளக்கூடாது. அப்போதுதான் அதன் முழுமையான சத்துக்கள் உடலுக்கு கிடைக்கும். இந்த கீரையை பச்சையாக உண்ணுதல் மிகவும் நல்லது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிடலாம். நல்ல ஞாபசக்தி உண்டாக வல்லாரை இலையுடன் அரிசி, திப்பிலி சேர்த்து ஊறவைத்த மைபோல அரைத்து, காலை, மாலை நெல்லிக்காய் அளவு சாப்பிட்டு வந்தால் நல்ல ஞாபசக்தி உண்டாகும்.வல்லாரை இலையுடன் பால் கலந்து அரைத்து, விழுதை நெல்லிக்காய் அளவு தினமும் உண்டு வர நரை, திரை அகலும். இளமைத் தோற்றம் திரும்பும். இந்த இலையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் யானைக் கால் நோய் குணமாகும்.
வாய்புண்ணுக்கு வல்லாரை கீரை நல்ல மருந்து. காலை, மாலை இருவேளையும் நான்கைந்து வல்லாரை கீரை இலைகளை சமைக்காமல் பச்சையாக வாயில்போட்டு மென்று தின்றால் வாய்ப்புண் நன்கு ஆறிவிடும். வல்லாரை இலையை நிழலில் நன்கு காய வைத்து இடித்து பொடியாக்கி, அதில் இரண்டு தேக்கரண்டி பாலுடன் சேர்த்து அருந்தலாம். இதனால் வயிற்று பூச்சிகள் நீங்கும். வல்லாரை கீரையை துவரம் பருப்பு, மிளகு, சீரகம், வெங்காயம் ஆகியவை சேர்த்து சாம்பாராகவும் சமைத்து சாப்பிடலாம்.