நெல்லையில் மருத்துவ கழிவு கொட்ட வந்த லாரி பறிமுதல்.. மேலும் ஒருவர் கைது..!!
கேரளாவில் இருந்து நெல்லை மாவட்டத்திற்கு மருத்துவ கழிவுகளை கொண்டு வந்த லாரியை பறிமுதல் செய்த போலீசார் லாரி உரிமையாளரை கைது செய்தனர்.
சமீபகாலமாக அண்டை மாவட்டமான தென்காசியில் மருத்துவக் கழிவுகள் மற்றும் இறைச்சி கழிவுகள் கேரளாவிலிருந்து கொண்டு வந்து கொட்டப்படும் சம்பவம் தொடர்கதையாக நடந்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக நெல்லை மாவட்டத்தில் மாநகரின் மிக அருகில் மக்கள் அதிக அளவு வசிக்கும் பகுதியில் இதுபோன்று மருத்துவக் கழிவுகளை கேரளாவிலிருந்து கொட்டப்படும் சம்பவம் பொதுமக்கள் இடையே பெரும் பீதியை ஏற்படுத்தியது.
திருநெல்வேலி சீதபற்பநல்லூர் அருகே நடுக்கல்லூர், பழவூர் பகுதியில் கடந்த திங்கள்கிழமையன்று அரசுக்கு சொந்தமான புறம்போக்கு நிலங்களில் கேரளாவின் மருத்துவக் கழிவுகள் மூட்டை மூட்டையாக கொட்டப்பட்டு இருந்தன. இதற்கு பெரும் கண்டனம் எழுந்த நிலையில் தமிழக-கேரளா எல்லையான புளியரை சோதனை சாவடியில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே கேரள மருத்துவக் கழிவுகள் தமிழ்நாட்டில் கொட்டப்படுவதற்கு தென் மண்டல பசுமை தீர்ப்பாயம் கண்டனமும் தெரிவித்தது. மேலும் தமிழ்நாட்டில் கொட்டப்பட்ட மருத்துவ கழிவுகளை அகற்றும் செலவினை கேரள மாசுகட்டுப்பாட்டு வாரியத்திடம் வசூலிக்க தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு உத்தரவிட்டது.
இந்த விவகாரத்தில் தலைமை ஏஜென்டாக செயல்பட்ட, திருநெல்வேலி மாவட்டம் சுத்தமல்லி பகுதியை சேர்ந்த மனோகர் மற்றும் மாயாண்டி ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த நிலையில் இன்று மீண்டும் கேரளாவில் இருந்து நெல்லை மாவட்டத்திற்கு மருத்துவ கழிவுகளை கொண்டு வரப்பட்டது. லாரியை பறிமுதல் செய்த போலீசார் சேலத்தை சேர்ந்த லாரி உரிமையாளரான செல்லதுரை என்பவரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட நபரை கேரளா அழைத்து சென்று விசாரணை நடத்த உள்ளதாக போலீசார் தகவல் தெரிவித்தனர்.
Read more ; திமுக எம்பிக்களின் செயல்பாடுகளை பார்த்து நாடே வியந்து கொண்டிருக்கிறது..!! – முதலமைச்சர் பெருமிதம்