6,000 உயிர்களை காவு வாங்கிய விஷவாயு ஆலை..!! பெட்ரோல் ஊற்றி எதிர்ப்பு தெரிவித்த இருவர் மீது தீப்பிடித்த பயங்கரம்..!!
மத்தியப்பிரதேச மாநிலம் போபாலில் 1984ஆம் ஆண்டில் விஷ வாயு கசிந்த ஆலையில் இருந்து விஷ கழிவுகளை பீதம்பூர் என்ற இடத்தில் எரிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் வெடித்துள்ளன. இந்த போராட்டத்தின்போது, இருவர் தங்களது மீது பெட்ரோல் ஊற்றி எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது, இருவர் மீதும் எதிர்பாராத விதமாக தீப்பிடித்ததால் பெரும் பரபரப்பு நிலவியது. இதையடுத்து, அங்கிருந்தவர்கள் உடனே ஓடிவந்து தீயை அணைத்தனர். இதில், காயமடைந்த இருவரும் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
1984ஆம் ஆண்டு போபால் யூனியன் கார்பைடு நிறுவனத்தின் பூச்சிக் கொல்லி உற்பத்தி ஆலையில் பயங்கர விஷ வாயு கசிவு ஏற்பட்டது. இந்த சம்பவம் உலகையே உறைய வைத்த நிலையில், இந்த கொடூரமான விஷவாயு கசிவால் சுமார் 6,000 பேர் வரை உயிரிழந்தனர். லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டனர். இந்த பாதிப்பு இன்றும் தொடர்ந்து வருகிறது. இந்த பின்னணியில் நீதிமன்ற உத்தரவுகளைப் பின்பற்றி 40 ஆண்டுகளுக்குப் பின், போபால் யூனியன் கார்பைடு ஆலையில் இருந்து விஷ கழிவுகள் அகற்றப்பட்டன.
இப்படி அகற்றப்பட்ட விஷ கழிவுகளை பீதம்பூர் என்ற இடத்தில் எரிக்க முடிவு செய்யப்பட்டது. ஆனால், இதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தப் போராட்டங்களின் ஒரு பகுதியாக நேற்று நடந்த ஆர்ப்பாட்டத்தில் தான், இருவர் மீது தீப்பிடிப்பு சம்பவம் நடைபெற்றுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.