தமிழகத்தில் பரவும் வைரஸ், சீன வைரஸுடன் ஒத்துப்போகிறது!… வழிகாட்டு நெறிமுறைகள் இதோ!
தமிழகத்தில் பரவலாக உள்ள வைரஸ் தன்மை, சீனாவில் பரவி வரும் வைரஸ் தன்மையுடன் ஒத்துப் போகிறது என, பொது சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
சீனாவின் வடக்கு பகுதியில் கடந்த அக்டோபர் மாதத்திலிருந்து குழந்தைகளுக்கு சுவாச கோளாறு உள்ளிட்ட நுரையீரல் நோய்க்கான அறிகுறிகள் தோன்றி, பலர் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளி வந்தன. இச்செய்தி உலக நாடுகளை கவலை கொள்ள செய்தது.
தமிழக சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டம், மக்கள் நல்வாழ்வு துறை செயலர் ககன்தீப் சிங் பேடி தலைமையில், சென்னை டி.எம்.எஸ்., வளாகத்தில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில், டெங்கு, ப்ளூ, நிமோனியா உள்ளிட்ட காய்ச்சல் பாதிப்புகள் குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. தொடர்ந்து, சீனாவில் பரவி வரும் வைரஸ் தன்மை குறித்தும் ஆலோசிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வவிநாயகம் பேசியதாவது, சீனாவில் பரவும் வைரஸ், 'ஹெச்9என்௨ இன்ப்ளூயன்ஸா' துணை வகையை சார்ந்த வைரஸ் ஆக உள்ளது. அதன் பாதிப்பு, நிமோனியா காய்ச்சல் போல உள்ளது.
இவ்வகை வைரசின் தன்மை, தமிழகத்தில் பரவி வரும் வைரஸ் தன்மையுடன் ஒத்துப் போகிறது. இவை, நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்களுக்கு, காய்ச்சல், சளி, இருமல், உடல்சோர்வு போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தும். அதேநேரம், சீனாவில் இருந்து தமிழகத்தில் வைரஸ் பரவாமல் தடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள வைரஸ் தன்மைகளில், மாற்றம் ஏற்பட்டுள்ளதா எனுவும் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
சீன வைரஸுடன் ஒத்துப்போவதால் தமிழகத்தில் புளூ காய்ச்சல் மற்றும் சுவாச பிரச்சனை ஆகியவற்றால் பாதிக்கப்படும் நோயாளிகள் கண்டறிந்து அவ்வப்போது வழங்கப்பட்டுள்ள சிகிச்சை குறித்தும் இணையதளத்தில் தினசரி பதிவு செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககம், மருத்துவ சேவைகள் இயக்கம் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு, பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வவிநாயகம் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், இன்ப்ளூயன்ஸா, மைக்கோபிளாஸ்மா, சார்ஸ் கோவிட்' ஆகிய பாதிப்புகளால் ஏற்படும் நிமோனியா தொற்றால், சீனாவில் குழந்தைகள் அதிகளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதையடுத்து, அனைத்து மாநிலங்களிலும், மருத்துவ கண்காணிப்பை முன்னெடுக்குமாறு மத்திய அரசு வலியுறுத்தி உள்ளது.
அதற்கான மருத்துவ கட்டமைப்பை மேம்படுத்துவதுடன், மருத்துவ கல்லுாரி மருத்துவமனைகள், தனியார் மருத்துவமனைகள், ஆய்வகங்கள், அரசு மருத்துவமனைகள் என, அனைத்து இடங்களிலும் சிகிச்சைக்கு வரும் நிமோனியா பாதிப்பு சார்ந்த நோயாளிகள் விபரங்களை, ஒருங்கிணைந்த நோய் தொற்று கண்காணிப்பு தளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். இது தொடர்பாக, சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தல் வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.