பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி...! கட்சிக்கு எந்த விதமான பாதிப்பும் ஏற்பட கூடாது... பாமக முகுந்தன் அதிரடி முடிவு...!
பாமக நிறுவனர் ராமதாஸ் என்ன முடிவெடுக்கிறாரோ அதற்கு நான் கட்டுப்பட்டவன் என முகுந்தன் அறிவித்துள்ளார்.
பாமக இளைஞரணி தலைவராக இருந்த அன்புமணி ராமதாஸ், அக்கட்சியின் தலைவராக கடந்த 2022-ம் ஆண்டு மே மாதம் பதவியேற்றார். இதையடுத்து ஜி.கே.மணியின் மகனும், திரைப்படத் துறையில் லைகா நிறுவனத்தின் தலைமை பொறுப்பில் உள்ள தமிழ் குமரனுக்கு இளைஞர் சங்கத் தலைவர் பதவியை அக்டோபர் மாதம் ராமதாஸ் வழங்கினார். அடுத்த 3 மாதத்தில், அதாவது ஜனவரி 2023-ம் ஆண்டு தனது பதவியை தமிழ் குமரன் ராஜினாமா செய்தார். இந்நிலையில், ராமதாஸின் மகள் ஸ்ரீகாந்தியின் மகனான முகுந்தனை மாநில ஊடகப் பிரிவு செயலாளராக நியமித்த ராமதாஸ், அவரை தன்னுடன் வைத்துக்கொண்டார்.
இந்த நிலையில் வானூர் அருகே பட்டானூரில் பாமக சார்பில் நேற்று நடைபெற்ற புத்தாண்டு சிறப்பு பொதுக்குழுவில் நிறுவனர் ராமதாஸ், ``அன்புமணிக்கு உதவியாக மாநில இளைஞரணி தலைவராக முகுந்தன் பரசுராமனை அறிவிக்கிறேன்” என்றார். அதற்கு எதிர்ப்பு தெரிவித்த அன்புமணி, ``அவன் கட்சியில் சேர்ந்து நான்கு மாதங்கள்தான் ஆகின்றன. அவனுக்கு இளைஞர் சங்கத் தலைவர் பதவியா ? அவனுக்கு என்ன அனுபவம் இருக்கும் ? கட்சியில் இருக்கும் அனுபவம் வாய்ந்தவர்களுக்கு பதவி கொடுங்கள்.
களத்தில் நல்ல திறமையான ஆட்கள் வேண்டும் என்று கூறுகிறேன்” என்று ஆவேசமானார் அன்புமணி. அவர் பேசிக் கொண்டிருக்கும்போதே குறுக்கிட்டுப் பேசிய மருத்துவர் ராமதாஸ், `யாராக இருந்தாலும் நான் சொல்வதைத்தான் கேட்க வேண்டும். நான் சொல்வதைக் கேட்கவில்லை என்றால் யாரும் இந்தக் கட்சியில் இருக்க முடியாது." என்றார். அதையடுத்து சென்னை பனையூரில் புதிதாக அலுவலகம் திறந்திருப்பதாகவும், தொண்டர்கள், நிர்வாகிகள் அனைவரும் தன்னை அங்கு வந்து சந்திக்குமாறும் கூறிவிட்டு வெளியேறினார் அன்புமணி. இது அரசியல் வட்டாரத்தில் பேசு பொருளாக மாறியது.
பாமக நிறுவனர் ராமதாஸ் என்ன முடிவெடுக்கிறாரோ அதற்கு நான் கட்டுப்பட்டவன். தொண்டராக இருக்கச் சொன்னாலும் இருந்து இந்த கட்சிக்கு என்னால் என்னவெல்லாம் செய்ய முடியுமோ அதனை நான் செய்வேன். என்னால் இந்த கட்சிக்கு எந்த விதமான பாதிப்பும் ஏற்படக்கூடாது என முகுந்தன் கூறியுள்ளார். பாமக நிறுவனர் ராமதாஸ் தனது பேரன் முகுந்தனை இளைஞரணி தலைவராக நியமித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுக்குழு கூட்டத்தில் இருந்து வெளியேறினார் அன்புமணி ராமதாஸ் என்பது குறிப்பிடத்தக்கது.