அடுத்த அதிர்ச்சி!. உலக பளுதுாக்குதல் போட்டியில் இருந்து இந்திய வீராங்கனை விலகல்!. என்ன காரணம்?
Meerabai Sanu: உலக பளுதுாக்குதல் சாம்பியன்ஷிப் போட்டியில் இருந்து இந்திய வீராங்கனை மீராபாய் சானு விலகியுள்ளார்.
உலக பளுதுாக்குதல் சாம்பியன்ஷிப் போட்டி வரும் டிச. 4, 14ம் தேதிகளில் பக்ரைனில் நடைபெறுகிறது. இதற்கான இந்திய அணியில், முன்னாள் உலக சாம்பியன், டோக்கியோ ஒலிம்பிக்கில் வெள்ளி வென்ற இந்திய வீராங்கனை மீராபாய் சானு உள்ளிட்டோர் அறிவிக்கப்பட்டனர். 30 வயதான மீராபாய் சானு காயத்தில் இருந்து மீண்டு வர தேவையான மறுவாழ்வு பயிற்சி மேற்கொண்டு வருவதால், உலக சாம்பியன்ஷிப் போட்டியில் இருந்து விலகினார்.
கடந்த ஆண்டு ஆசிய விளையாட்டின் போது இடுப்பு பகுதியில் காயமடைந்த மீராபாய் சானு, பாரிஸ் ஒலிம்பிக்கில் 4வது இடம் பிடித்தார். இதனால் இவரது உடற்தகுதி மீது விமர்சனம் எழுந்தது. வரும் 2026ல் நடக்கவுள்ள காமன்வெல்த், ஆசிய விளையாட்டில் முழு உடற்தகுதியுடன் பங்கேற்க தயாராகி வருகிறார்.
மீராபாய் சானு விலகியதால் 49 கிலோ எடைப்பிரிவில் இந்தியா சார்பில் காமன்வெல்த் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்ற ஞானேஷ்வரி யாதவ் 21, பங்கேற்கிறார். மற்ற எடைப்பிரிவில் இந்தியாவின் பிந்தியாராணி தேவி (55 கிலோ), திதிமோனி சோனோவால் (64 கிலோ) களமிறங்குகின்றனர். இதில் பிந்தியாராணி, காமன்வெல்த் விளையாட்டில் வெள்ளி வென்றுள்ளார். திதிமோனி, தேசிய சாம்பியன்ஷிப், கேலோ இந்தியா லீக்கில் தங்கம் கைப்பற்றினார்.