”கொரோனாவை மிஞ்சும் அடுத்த பெருந்தொற்று”..!! ”எப்போது வேண்டுமானாலும் வெடிக்கலாம்”..!! ஆய்வாளர்கள் எச்சரிக்கை..!!
கடந்த 2019ஆம் ஆண்டு இறுதியில் சீனாவில் முதன்முதலில் கொரோனா வைரஸ் பரவியது. அதன் பிறகு உலகின் மற்ற பகுதிகளுக்கும் பரவிய இந்த வைரஸ், மிக மோசமான ஒரு பெருந்தொற்றை ஏற்படுத்தியது. வல்லரசு நாடுகள், வளரும் நாடுகள், பின்தங்கிய நாடுகள் என அனைத்துமே கொரோனா வைரஸால் ஸ்தம்பித்து போனது. இதனால் உயிரிழப்புகள் மட்டுமின்றி மோசமான பொருளாதார இழப்புகள் கூட ஏற்பட்டது. கொரோனா பரவ தொடங்கி 5 ஆண்டுகள் ஆகிவிட்ட போதிலும், இன்னும் அது ஏற்படுத்திய வடு அப்படியே இருக்கிறது.
இந்நிலையில் தான், 2025ஆம் ஆண்டில் வேறு வைரஸ்கள் கூட பெருந்தொற்றாக வெடிக்கும் அபாயம் இருப்பதாக வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர். எந்தவொரு வைரஸ் வேண்டுமானாலும் திடீரென பெருந்தொற்றாக மாறும் அபாயம் இருந்தாலும், சில வைரஸ்கள் மற்றவற்றைக் காட்டிலும் அதிக ஆபத்தானதாக இருக்கிறது. அதில் சில குறிப்பிட்ட இன்ஃப்ளூயன்ஸா வைரஸ்களும் அடங்கும்.
குறிப்பாக, இன்ஃப்ளூயன்ஸா A துணை வகை H5N1 வகை ஆபத்தானதாக மாறலாம் என ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். H5N1 வைரஸ், பறவை காய்ச்சலில் ஒரு வகையாகும். இப்போது காடுகளில் இருக்கும் பறவைகள், வளர்க்கப்படும் கோழி உள்ளிட்ட பறவைகளுக்கு இடையே வேகமாகப் பரவி வருகிறது. இத்தனை ஆண்டுகள் H5N1 வைரஸ் மனிதர்களைத் தாக்காமல் இருந்தது. ஆனால், சில ஆண்டுகளாக இது மனிதர்களையும் தாக்க தொடங்கியுள்ளது.
கடந்த ஆண்டு மட்டும் 61 பேருக்கு இந்த வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் பெரும்பாலானோர் பறவை பண்ணைகளில் வேலை செய்தவர்கள். இந்த பறவை காய்ச்சல் 30% உயிரிழப்பை ஏற்படுத்துவதும் கவலையளிக்கும் விஷயமாகும். கொரோனாவை போல H5N1 வைரஸ் பாதிக்கப்பட்ட நபரில் இருந்து மற்றொருவருக்குப் பரவாது என்பது மட்டுமே ஆறுதல் தரும் விஷயமாக உள்ளது. இது பாதிக்கப்பட்ட விலங்கிடம் இருந்து மட்டுமே மனிதர்களுக்குப் பரவக்கூடியது.
இருப்பினும், இது அப்படியே தொடரும் எனச் சொல்ல முடியாது. எந்தவொரு வைரஸும் தன்னைத் தானே மாற்றிக்கொண்டே இருக்கும். அதன்படி, எதாவது ஒரு H5N1 வைரஸ் வேரியண்ட்டின் ஏற்பிகள் மாறினால், அது எளிதாக மனிதர்களிடையே பரவ தொடங்கும். அது அடுத்த பெருந்தொற்றை ஆரம்பித்து வைக்கும். உலகின் சில நாடுகள் H5N1 வைரஸ் பெருந்தொற்றாக மாறும் என்பதைக் கணித்து அதற்கேற்ப நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
பிரிட்டன் 50 லட்சம் பறவை காய்ச்சல் தடுப்பூசிகளை வாங்கி தயார் நிலையில் வைத்துள்ளது. இதேபோல உலகின் அனைத்து நாடுகளும் தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஏனென்றால், கொரோனாவை போல மீண்டும் ஒரு பாதிப்பை உலக நாடுகளால் தாங்க முடியாது. எனவே, நிலைமை கையை விட்டுப் போகும் முன்பு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.
Read More : BREAKING | தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ்..!! முதலமைச்சர் முக.ஸ்டாலின் அறிவிப்பு..!!