அடுத்த இயற்கை பேரழிவு!. மேகவெடிப்பால் 5பேர் பலி!. 50 பேரை காணவில்லை!. உருக்குலைந்த இமாச்சல்!
Cloudburst: வயநாடு நிலச்சரிவின் துயரத்தில் இருந்து மீள்வதற்குள் அடுத்த இயற்கை பேரழிவான மேகவெடிப்பு நிகழ்ந்துள்ளது. இமாச்சல் மாநிலத்தில் நிகழ்ந்த பயங்கர சம்பவத்தில் 5 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 50 பேரை காணவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
கேரள மாநிலம் வயநாட்டில் கடந்த சில நாட்களாக பெய்துவரும் கனமழை காரணமாக ஆங்காங்கே வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவு சம்பவங்கள் உலகையே நடுங்கவைத்துள்ளது. அந்தவகையில் கடந்த 30ம் தேதி அதிகாலை வயநாட்டில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் சிக்கி பல்வேறு கிராமங்களை சேர்ந்த மக்கள் மண்ணோடு மண்ணாக புதைந்தனர். வீடுகள் இருந்த தடயமே தெரியாத அளவுக்கு அப்பகுதி முழுவதும் சேற்று மண்ணால் மூடப்பட்டுள்ளது.
நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட இடங்களில் மீட்பு பணி முழு வீச்சில் நடைபெற்றது. இங்கு தோண்ட தோண்ட உடல்கள் கிடைத்து வருகின்றன. தற்போதைய நிலவரப்படி இதுவரை நிலச்சரிவில் 3 நாட்கள் தொடர்ந்து நடந்த மீட்பு பணியில் 300க்கும் அதிகமானோர் பலியானது உறுதிபடுத்தப்பட்டது. மேலும் 300க்கும் மேற்பட்டோர் மாயமாகி இருப்பதாகவும், அவரை பத்திரமாக மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளியாகி வருகிறது.
இந்தநிலையில், இந்த பேரழிவின் துயரத்தில் இருந்து மீள்வதற்குள் அடுத்த இயற்கை சீற்றம் கோரத்தாண்டவம் ஆடியுள்ளது. இமாச்சல் பிரதேசத்தில் மேக வெடிப்பு ஏற்பட்டுள்ளது. அதாவது, சிம்லா மாவட்டத்தில் உள்ள சமேஜ் குத் என்ற இடத்தில் நிகழ்ந்துள்ளது. இதனால் கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. இந்த பகுதியில் மழை வெள்ளத்தில் சிக்கி 5 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் 50 பேர் மாயமாகி உள்ளனர். மலானா நீர்மின்திட்டம் பகுதியில் சிலர் சிக்கியுள்ளனர். இதேபோல் மண்டி மாவட்டத்தின் பதாரில் உள்ள தலதுகோட் பகுதியிலும் நள்ளிரவு மேகவெடிப்பு ஏற்பட்டுள்ளது. மழையின் காரணமாக ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கரையோரங்களில் இருந்த வீடுகள் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டுள்ளன.
குலு மாவட்டத்தில் 9 வீடுகள் அடித்து செல்லப்பட்டுள்ளது. மணலி-சண்டிகர் தேசிய நெடுஞ்சாலையின் பல்வேறு இடங்களில் நிலச்சரிவின் காரணமாக போக்குவரத்து முடங்கி விட்டது. பியாஸ் ஆற்றின் நீர் பாண்டோ பகுதியில் பல வீடுகளில் புகுந்தது. இதனால் இந்த பகுதியில் பலரை காணவில்லை. தேசிய பேரிடர் மீட்பு படை, இந்தோ-திபெத் எல்லை காவல் படையினர், போலீசார் மற்றும் ஊர்காவலர் படையினர் மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். காணாமல் போனவர்களை டிரோன் மூலமாக தேடும் பணியும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்கள் மற்றும் பள்ளிகள் இரண்டு நாட்களுக்கு மூடப்பட்டுள்ளன. 13 இடங்களில் மாநில அவசர மையங்கள் திறக்கப்பட்டுள்ளன.
ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, அமைச்சர் ஜேபி நட்டா ஆகியோர் முதல்வர் சுக்விந்தர் சிங்கை தொடர்பு கொண்டு நிலைமை குறித்து கேட்டறிந்தனர். தேவையான அனைத்து உதவிகளையும் ஒன்றிய அரசு செய்து தரும் என்றும் அவர் உறுதியளித்துள்ளனர். இமாச்சலில் ஒரே நேரத்தில் குலுவில் உள்ள நிர்மந்த், சைஞ்ச், மலானா பகுதிகளிலும், மண்டியில் உள்ள பதார், சிம்லா மாவட்டத்தில் உள்ள ராம்பூரில் மேக வெடிப்பு நடந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Readmore: இந்த தவறை மட்டும் செய்யாதீங்க..!! புற்றுநோய் ஏற்படும் அபாயம்..!! வெளியான அதிர்ச்சி அறிக்கை..!!