டிடி நேஷனல் சேனலில் ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படம்... தேர்தல் ஆணையத்திற்கு காங்கிரஸ் கடிதம்!
தி கேரளா ஸ்டோரி திரைப்படம் டிடி நேஷனல் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், இதற்கு கண்டனம் தெரிவித்து, காங்கிரஸ் கட்சி தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதியுள்ளது.
இந்தியில் விபுல் அம்ருத்லால் ஷா தயாரிப்பில், சுதிப்தோ சென் இயக்கத்தில் உருவான திரைப்படம், 'தி கேரளா ஸ்டோரி'. இப்படத்தில் அதா சர்மா, பிரணவ் மிஷ்ரா, யோகிதா பிஹானி, சோனியா பாலானி, சித்தி இத்னானி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கடந்த ஆண்டு வெளியான இந்த திரைப்படம் பல விமர்சனங்களை பெற்றது.
இத்திரைப்படம் கேரள பெண்கள் மதமாற்றம் செய்யப்பட்டு ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பில் திட்டமிடப்பட்டு இணைக்கப்படுகின்றனர். இஸ்லாமியர்களுக்கு எதிரான போலியான கருத்து பிம்பத்தை இந்த திரைப்படம் கட்டமைப்பதாக பல்வேறு தரப்பினரும் குற்றம்சாட்டினர். இருப்பினும் இத்திரைப்படம் ரூ.240 கோடிக்கு மேல் வசூலித்தாக கூறப்பட்டது.
இந்நிலையில் இன்று இரவு 8 மணிக்கு டிடி நேஷனல் தொலைக்காட்சியில் ‘தி கேரளா ஸ்டோரி’ ஒளிப்பரப்படவுள்ளது என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. ‘உலகையே உலுக்கிய கேரளாவின் கதை!’ என்ற தலைப்பின்கீழ் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு கண்டனம் தெரிவித்து, இத்திரப்படத்தினை தொலைக்காட்சியில் திரையடக் கூடாது என கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தனது சமூக வலைதளப்பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
அதேபோல காங்கிரஸ் கட்சியும், டிடி நேஷனல் முயற்சிக்கு கண்டனம் தெரிவித்திருக்கிறது. இதுகுறித்து கேரள சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், அம்மாநில காங்கிரசின் மூத்த தலைவர்களில் ஒருவருமான வி.டி.சதீசன் கூறியதாவது, “மோடி தலைமையிலான இந்த நடவடிக்கை, சமூகத்தில் பிளவை ஏற்படுத்துவதை நோக்கமாக கொண்டிருக்கிறது. சமூகத்தின் மதச்சார்பற்ற கட்டமைப்பிற்குள் முரண்பாட்டை வளர்க்க மோடி தலைமையிலான அரசாங்கம் திரைப்படத்தை பயன்படுத்த முயற்சிக்கின்றனது. மத்திய அரசு நிறுவனமான தூர்தர்ஷனை அரசியல் ஆதாயத்திற்காக பயன்படுத்துவதை ஏற்க முடியாது. இது அப்பட்டமான தேர்தல் நடத்தை விதி மீறல்” என்று கூறியுள்ளார்.
மேலும் இது குறித்து தேர்தல் ஆணையத்திற்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், “கேரளா ஸ்டோரி என்பது மிகவும் தவறான பின்னணியை அடிப்படையாகக் கொண்ட ஒரு பிரச்சாரப் படம் என்பதும், இது கேரளா குறித்த தவறான பார்வை உருவாக்க முனையும் படம் என்பது உங்களுக்கு தெரியும். மத அடிப்படையில் சமூகத்தை பிளவுபடுத்தும் முயற்சிகள் தடுக்கப்பட வேண்டும். எனவே கேரளா ஸ்டோரியை திரையிடும் முயற்சியை டிடி நேஷனல் கைவிட்டு விலக வேண்டும். இதை தேர்தல் ஆணையம் உறுதி செய்ய வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்