கண்டம்விட்டு கண்டம்பாயும் ஏவுகணை தாக்குதல் தொடரும்!. உக்ரைனுக்கு அதிபர் புதின் பகிரங்க எச்சரிக்கை!
Putin: உக்ரைன் மீது, கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை தாக்குதல் தொடரும் என, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன், 'நேட்டோ' அமைப்பில் இணைய விருப்பம் தெரிவித்ததால் ஆத்திரமடைந்த ரஷ்யா, 2022ல் அந்நாட்டின் மீது போர் தொடுத்தது. 1000 நாட்களை கடந்து, இரு நாடுகளுக்கு இடையே மோதல் நடந்து வருகிறது. இதில், இருதரப்பிலும் நுாற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளனர். போரை கைவிடும்படி உலக நாடுகள் பலமுறை வலியுறுத்தியும், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் விடாப்பிடியாக இருக்கிறார். நீண்ட துாரம் பயணித்து ரஷ்ய நகரங்களை தாக்கும் திறன் உடைய ஏவுகணைகளை, உக்ரைனுக்கு அமெரிக்கா அளித்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த ரஷ்ய அதிபர் புடின், தங்களின் அணு ஆயுத கோட்பாட்டில் திருத்தம் செய்தார்.
இதன்படி, இந்த போரில் அணு ஆயுதம் வைத்துள்ள நாடுகள், அணு ஆயுதம் இல்லாத உக்ரைனுக்கு உதவினால், அந்த நாடுகள் ரஷ்யாவுக்கு எதிராக கூட்டாக போரிடுவதாகவே கருதப்படும் என தெரிவித்தார். இந்த ஏவுகணைகளை உக்ரைன் பயன்படுத்த, அமெரிக்கா சமீபத்தில் அனுமதி அளித்தது. இதைஅடுத்து, அமெரிக்க ஏவுகணைகளை ரஷ்யா மீது உக்ரைன் அடுத்தடுத்து ஏவி தாக்குதல் நடத்தியது. ஐ.சி.பி.எம்., எனப்படும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை, ரஷ்யா இந்த போரில் முதன்முறையாக பயன்படுத்தியது.
உக்ரைனின் டினிப்ரோ நகரம் மீது, ரஷ்ய ராணுவம் புதிய வகை ஏவுகணை தாக்குதலை சமீபத்தில் நடத்தியது. இந்நிலையில், ரஷ்ய ராணுவ தலைமை அதிகாரிகளுடனான சந்திப்பில், அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புடின் கூறுகையில், “புதிய வகையான ஏவுகணையின் சோதனைகள், வரும் நாட்களில் இன்னும் அதிகமாக இருக்கும். நாட்டின் மீதான பாதுகாப்பு அச்சுறுத்தல், போர் நிலைமை உள்ளிட்டவற்றை கருதி இந்த சோதனை நடக்கும்,” என்றார்.
இதற்கிடையே, உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி கூறுகையில், “ரஷ்யாவின் ஏவுகணை தாக்குதல் முட்டாள்தனமானது. வான் பாதுகாப்புக்கு தேவையான உதவிகளை வழங்கும்படி, எங்களது நட்பு நாடுகளிடம் கேட்டுள்ளோம். ரஷ்ய ஏவுகணை அச்சுறுத்தல் எதுவாக இருந்தாலும், அதை புறக்கணிக்க முடியாது,” என்றார்.
Readmore: உஷார்!. PM Kisan செயலி மூலம் அரங்கேறும் பண மோசடி!. சைபர் கிரைம் போலீஸ் எச்சரிக்கை!