Alert: 30-ம் தேதி வரை.. வங்க கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி... 55 கி.மீ வேகத்தில் சூறாவளி காற்று...!
வங்கக் கடல் பகுதியில் உருவான , காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு, தென்மேற்கு திசையில் நகர்ந்து இன்று வலுவிழக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது
தென்மேற்கு மற்றும் அதையொட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில், தெற்கு ஆந்திர வடதமிழக கடலோரப் பகுதிகளில் நேற்று முன்தினம் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் தெற்கு ஆந்திர வட தமிழக கடலோரப் பகுதிகளில் நேற்று நிலவியது.இது மேற்கு, தென்மேற்கு திசையில் நகர்ந்து, காற்றழுத்த தாழ்வு பகுதியாக அதே பகுதிகளில் இன்று வலுவிழக்கும். இதற்கிடையே, லட்சத்தீவு மற்றும் அதையொட்டிய பகுதிகளில் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இவற்றின் தாக்கத்தால் வடதமிழகத்தில் சில இடங்களிலும், தென் தமிழகத்தில் ஓரிரு இடங் களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்று இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யும். வரும் 30-ம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சிலபகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய, மிதமான மழை பெய்யலாம். அதிகபட்ச வெப்பநிலை 82.4 முதல் 84.2 டிகிரி, குறைந்தபட்ச வெப்பநிலை 73.4 முதல் 75.2 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கும்.
வடதமிழக கடலோர பகுதி களில்,மத்திய மேற்கு வங்கக் கடல் மற்றும் அதையொட்டிய தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகள், வடதமிழக கடலோர பகுதிகளையொட்டிய தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளில் இன்று மணிக்கு 35 முதல் 45 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 55 கி.மீ. வேகத்திலும் சூறாவளிக் காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.