சட்டப்பேரவைக்குள் குட்கா.. முதல்வர் ஸ்டாலினுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு!
குட்கா எடுத்துச் சென்றதாகக் கூறி அப்போதைய சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவராக இருந்த, தமிழக முதல்வர் ஸ்டாலின் மீதான வழக்கு விசாரணையை ஜூலை 25-க்கு ஒத்திவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தடை செய்யப்பட்ட குட்காவை சட்டப்பேரவைக்குள் எடுத்துச் சென்றதாக முதல்வர் ஸ்டாலின் மற்றும் திமுக எம்எல்ஏ-க்கள் மீது அதிமுக ஆட்சிக்காலத்தில் உரிமைக்குழு விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து, உரிமைக்குழுவால் அனுப்பப்பட்ட நோட்டீஸை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸை ரத்து செய்து உத்தரவிட்டிருந்தது.
இதற்கு எதிராக தமிழ்நாடு சட்டசபை செயலாளர் மேல்முறையீடு செய்திருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், நீதிபதி சி.குமரப்பன் ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது தமிழக அரசு வழக்கை திரும்பப் பெறுவதாக அறிவித்திருந்தது. ஆனால், முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் தரப்பினர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். எனவே, இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் இன்று (ஜூலை 22) தீர்ப்பு வழங்கப்படும் என்று அறிவித்திருத்தனர்.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அதிமுக சார்பில் குற்றஞ்சாட்டப்பட்ட 17 பேரில் 4 பேருக்கு மட்டுமே நோட்டீஸ் வழங்கியதாகக் கூறியுள்ளனர். ஆனால், முதல்வர் ஸ்டாலின் உள்பட அப்போதைய எம்.எல்.ஏ-க்கள் யாருக்கும் நோட்டீஸ் வழங்கப்படவில்லை என்று கூறியதால், அவர்களுக்கு இன்றே நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு வழக்கு விசாரணையை வருகிற வியாழக்கிழமைக்கு (ஜூலை 25) நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.