தமிழகமே... உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி... 25-ம் தேதி மாலை தான் சம்பவம் இருக்கு...!
தென் மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் ஒரு புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவானது. இதன் காரணமாக இன்று 12 மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து வானிலை மையம் வெளியிட்ட செய்தி குறிப்பில்; வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது உருவாகியுள்ளது. இது வடகிழக்கு திசையில் நகர்ந்து, நாளை காலை, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மத்திய வங்கக்கடல் பகுதிகளில் நிலவக்கூடும். பிறகு, மேலும் வலுப்பெற்று வடகிழக்கு திசையில் நகர்ந்து, வடகிழக்கு, வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் 25-ம் தேதி மாலை நிலவக்கூடும்.
இன்று தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், ராமநாதபுரம், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருப்பூர், கோவை, நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது. நாளை நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.