தாயாக அரவணைத்த கடத்தல்காரன்!. விட்டுச்செல்ல மனமில்லாமல் கதறி அழுத குழந்தை!. நெகிழ்ச்சி வீடியோ!
Jaipur: ஜெய்ப்பூரில் குடும்ப பிரச்னை காரணமாக தனது உறவினரின் குழந்தையை கடத்தியுள்ளார் போலீஸ் கான்ஸ்டபிள் ஒருவர். 14 மாதங்களாக அவருடன் வளர்ந்த குழந்தையை மீட்டு தாயிடம் கொண்டு சேர்க்கும்போது, தாயிடம் செல்ல மறுத்து கடத்தியவரை விட்டு பிரிய மனமில்லாமல் 2 வயது குழந்தை அழுத சம்பவம் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
உத்தர பிரதேசம் மாநிலம் ஆக்ராவை சேர்ந்த தலைமை போலீஸ் கான்ஸ்டபிள் தனுஜ் சாஹர். சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள இவர், கடந்த 2023, ஜூன் 14ம் தேதி குடும்ப பிரச்னை காரணமாக ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள தனது உறவினர் ஒருவரின் பிருத்வி என்ற 11 மாத குழந்தையை கடத்தி சென்றுள்ளார்.
இதுப்பற்றி வழக்குப்பதிவு செய்த போலீசார், தனுஜை தொடர்ந்து தேடி வந்துள்ளனர். ஆனால், தனுஜ், நீண்ட முடி, தாடியுடன் தனது தோற்றத்தை மாற்றிக்கொண்டு உ.பி., மாநிலம் மதுராவில் உள்ள யமுனை ஆற்றங்கரையில் குடிசை அமைத்து துறவி போல வாழ்ந்து வந்துள்ளார். மற்றவர்களிடம் பிருத்வியை தனது மகன் எனக் கூறிவந்துள்ளார். சுமார் 14 மாதங்களுக்கு பிறகு அவரது இருப்பிடத்தை அறிந்த போலீசார், தனுஜை கைது செய்து குழந்தையை மீட்டனர்.
குழந்தையை அவரது தாயிடம் ஒப்படைக்கும்போது, அவருடன் செல்ல மறுத்து பிருத்வி அடம்பிடித்துள்ளான். இதனைப்பார்த்து குற்றவாளி தனுஜூம் அழ, போலீசார் ஆச்சரியமாக பார்த்தனர். பின்னர், இவர்களின் 'பாசப்போராட்டத்தை' விலக்கிவிட்டு, தனுஜை கைது செய்ததுடன், தாயிடம் பிருத்வியை ஒப்படைத்தனர்.