லிமிட் இவ்வளவு தான்.. சுற்றுலா பயணிகள் வருகையை கட்டுப்படுத்த வேண்டும்..!! - கேரள ஐகோர்ட் அதிரடி
வயநாடு நிலச்சரிவு சம்பவத்தை அடுத்து கேரளாவில் மலைப்பகுதிகளில் எவ்வளவு பேர் வரை அனுமதிக்க முடியும் என்பதை மதிப்பீடு செய்து இது தொடர்பான ஆய்வறிக்கையை அடுத்த மாதம் 25 ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்று கேரள உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கேரளாவின் வயநாட்டில் கடந்த மாதம் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் சிக்கி சூரல்மலை, முண்டக்கை ஆகிய இரு கிராமங்கள் மண்ணோடு மண்ணாக புதைந்தன. நிலச்சரிவினால் 400-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். ஆயிரக்கணக்கானோர் தங்கள் உடைமைகளையும் இடங்களையும் பறிகொடுத்தனர்.
இதனிடையே, இயற்கை பேரிடர் தடுப்பு தொடர்பாகவும், சுற்றுலா பயணிகளின் வருகையை முறைப்படுத்த வேண்டும், மலைவாசஸ்தலங்களுக்கு சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வருகை தருவதை தடுக்க வேண்டும் எனபதை வலியுறுத்தியும் கேரள உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த கேரள உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவினை பிறப்பித்துள்ளது. கேரள உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது:- மலைவாசஸ்தலங்களில் எவ்வளவு பேர் வரை அனுமதிக்க முடியும் என்பதை மதிப்பீடு செய்து அறிக்கையை அடுத்த மாதம் 25 ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும். மலைவாசஸ்தலங்களில் சுற்றுலாப் பயணிகளின் கட்டுப்பாடற்ற வருகையும், இதன் காரணமாக சுற்றுலா மையங்களில் நடக்கும் கட்டுப்பாடு இல்லாத வளர்ச்சியும் காளான்கள் போல முளைக்கும் கான்கிரிட் கட்டிடங்களும் மலைவாசஸ்தலங்களுக்கு பேராபத்தை உருவாக்குகின்றன.
எனவே, சுற்றுலா பயணிகள் வருகையை கட்டுப்படுத்த வேண்டியது அவசியம். பாதுகாக்கப்பட்ட பகுதிகள், வனப்பகுதிகளுக்கு தினமும் எத்தனை பேரை அனுமதிக்கலாம் என்பதற்கும் அதிகபட்ச வரையறை நிர்ணயிக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளது.
Read more ; இந்து மக்களை அவமதிக்கும் முதல்வர் ஸ்டாலின்..! வானதி ஸ்ரீனிவாசன் குற்றச்சாட்டு…!