கன்னடர்களுக்கே 100 % வேலை மசோதா... வலுத்த கண்டன குரல்...! நிறுத்தி வைத்த மாநில அரசு..!
தனியார் நிறுவனங்களில் இடஒதுக்கீட்டுக்கான மசோதாவை கர்நாடக அரசு நிறுத்தி வைத்துள்ளது.
கர்நாடக மாநிலத்தில் உள்ள தனியார் நிறுவனங்களில் சி, டி பிரிவு பணியிடங்களில் கன்னடர்களுக்கே 100% வேலை வழங்கப்பட வேண்டும் என்ற மசோதாவுக்கு மாநில அரசு ஒப்புதல் அளித்தது. இல்லையெனில் அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகள் மற்றும் பிற தனியார் நிறுவனங்களில் உள்ளூர் பணியாளர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை மசோதா 2024, கர்நாடக சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்படும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்தச் சட்டம் நடைமுறைக்கு வந்தபிறகு, சட்டத்தின் விதிகளுக்கு முரணாக எந்த ஒரு நிறுவனத்தின் உரிமையாளர் அல்லது மேலாளர் செயல்பட்டாலும் அவருக்கு ரூ.10,000 முதல் ரூ.25,000 வரை அபராதம் விதிக்கப்படும். தண்டனை விதிக்கப்பட்ட பிறகும் மீறல் தொடர்ந்தால், மேலும் அபராதம் விதிக்கப்படும். மீறல் தொடரும் வரை ஒவ்வொரு நாளும் நூறு ரூபாய் வரை நீட்டிக்கப்படலாம் என்று அந்த மசோதாவில் கூறப்பட்டிருந்தது.
இந்த நிலையில் பல்வேறு தரப்பினரிடம் இருந்து வந்த கடுமையான எதிர்ப்புகளின் எதிரொலியாக, கர்நாடகாவில் தனியார் நிறுவனங்கள் நிர்வாகப் பொறுப்புகளில் 50 சதவீதமும், நிர்வாகமற்ற பொறுப்புகளில் 70 சதவீதமும் கன்னடர்களுக்கு ஒதுக்குவதை உறுதிப்படுத்துவதற்கான மசோதாவை நிறைவேற்றும் முடிவை கர்நாடக அரசு நிறுத்தி வைத்துள்ளது.