For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

தமிழகத்தை புறக்கணிக்கும் பாஜக அரசின் இடைக்கால பட்ஜெட்...! எம்.பி-களுக்கு முதல்வர் போட்ட உத்தரவு...!

06:40 AM Feb 02, 2024 IST | 1newsnationuser2
தமிழகத்தை புறக்கணிக்கும் பாஜக அரசின் இடைக்கால பட்ஜெட்     எம் பி களுக்கு முதல்வர் போட்ட உத்தரவு
Advertisement

பாஜக அரசின் இடைக்கால பட்ஜெட் தமிழ்நாட்டை புறக்கணிக்கும் பட்ஜெட்டாக உள்ளது என முதல்வர் மு.க.ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார்.

Advertisement

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வந்து பத்தாண்டு காலம் ஆட்சி செய்து, சொல்லிக்கொள்ள எந்தச் சாதனையும் செய்யாத பாஜக அரசு, ஆட்சிக் காலத்தையும் முடித்து விடைபெறும் நேரத்தில் இடைக்கால நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்துள்ளது. எடை போட்டுப் பார்க்க ஏதுமில்லாத வெற்று அறிக்கையைத் தாக்கல் செய்துள்ளார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.

கடந்த காலச் சாதனைகளையும் இந்த நிதிநிலை அறிக்கை சொல்லவில்லை; நிகழ்காலப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதாகவும் இது அமையவில்லை; எதிர்காலப் பயன்களுக்கு உத்தரவாதம் தருவதாகவும் இல்லை. மொத்தத்தில், ஏதுமற்ற அறிக்கையை வாசித்தளித்திருக்கிறார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். ஆட்சிக் காலம் முடியப் போகிறது என்ற அலட்சியம்தான் இந்த அறிக்கையில் தெரிகிறது. நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வருவதால் பல்வேறு சலுகைகளைப் பொதுமக்கள் எதிர்பார்த்துக் காத்திருந்தார்கள். பெட்ரோல், டீசல், சிலிண்டர் ஆகியவற்றின் விலைக்குறைப்பு இருக்கும் என்று எதிர்பார்த்தார்கள். ஆனால், பொதுமக்களுக்கு ஏமாற்றத்தையே பரிசளித்துள்ளது இந்த நிதிநிலை அறிக்கை.

வருமான வரி உச்சவரம்பில் மாற்றம் இருக்கும் என்று நடுத்தர மக்கள் எதிர்பார்த்தார்கள். அதனையும் வழங்கவில்லை; எந்தப் பொருளுக்கும் வரிக் குறைப்பு வழங்கப்படவில்லை. சலுகைகளும் ஏதுமில்லை; சாதாரண, சாமானிய, ஏழை, எளிய, நடுத்தர மக்களுக்கான எந்த அறிவிப்பும் இல்லை. உழவர்களின் மிக முக்கியமான கோரிக்கையான குறைந்தபட்ச ஆதார விலை குறித்த அறிவிப்பு உண்டா? அதுவும் இல்லை. இப்படி 'இல்லை... இல்லை...' என்று சொல்வதற்காக எதற்கு நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டும்? நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ளது 'இல்லா நிலை' பட்ஜெட்டாக மட்டுமே அமைந்துள்ளது.

வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் பாஜகவுக்குத்தான் வாக்களிப்பார்கள் என்றும்; ஜூலை மாதம் நாங்கள்தான் பட்ஜெட் தாக்கல் செய்வோம் என்றும் அமைச்சர் சொல்லி இருப்பது உச்சகட்ட நகைச்சுவை. நிதிநிலை அறிக்கையை அரசியல் பேராசை அறிக்கையாக ஆக்கி இருக்கிறார். நிதிநிலை அறிக்கையில் மக்களை ஏமாற்றியது போல, மக்களும் ஏமாற்றத்தை பாஜகவுக்கு வருகிற தேர்தலில் வழங்குவார்கள்.

2047-ஆம் ஆண்டு புதிய இந்தியாவைப் படைப்போம் என்று சொல்லி இருக்கிறார்கள். 2014-ம் ஆண்டு முதன்முதலாக நரேந்திர மோடி, பிரதமர் ஆனபோது புதிய இந்தியா பிறந்ததாகச் சொன்னார்கள். 500,1000 ரூபாய் நோட்டுகளைத் தடை செய்தபோதும் புதிய இந்தியா பிறந்துவிட்டது என்றார்கள். 2019-ம் ஆண்டு மீண்டும் பாஜக ஆட்சிக்கு வந்ததும் புதிய இந்தியா பிறந்தது என்றார்கள். ஆனால் 2024 வரை புதிய இந்தியா பிறக்கவே இல்லை. 2047-ஆம் ஆண்டுதான் புதிய இந்தியா பிறக்கப் போவதாகநிதியமைச்சர் சொல்லி இருக்கிறார். இவர்களால் புதிய இந்தியாவை எத்தனை ஆண்டுகள் ஆனாலும் உருவாக்க முடியாது என்பதே உண்மை. புதிய இந்தியாவை 'இண்டியா' கூட்டணி நிச்சயம் உருவாக்கும்.

தமிழ்நாட்டு மக்கள் நலனை முழுமையாகப் புறக்கணித்து, தமிழக வளர்ச்சிக்கு கிஞ்சித்தும் அக்கறை இல்லாமல் ஒரு நிதிநிலை அறிக்கையைத் தயாரித்து அளித்துள்ளார் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் . இந்த நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாடு திட்டமிட்டு புறக்கணிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து திமுக எம்.பி.,கள் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்புவார்கள். நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள அண்ணல் காந்தியடிகள் சிலைக்கு முன்னால் கருப்புச் சின்னம் அணிந்து போராட்டமும் நடத்துவார்கள் என தெரிவித்துள்ளார்.

Tags :
Advertisement