காலையிலே சோகம்... விநாயகர் ஊர்வலத்தில் டிராக்டர் கவிழ்ந்து 3 சிறுவர்கள் பலி...!
விநாயகர் ஊர்வலத்தில் டிராக்டர் கவிழ்ந்து 3 சிறுவர்கள் பலியான சம்பவம் தேனியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி விழா நேற்று முன்தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதற்காக அரசு வழிகாட்டுதல் நெறிமுறைகளின்படி பொது இடங்களில் விநாயகர் சிலை வைத்து வழிபாடு நடைபெற்றது. தேனியில் ஆங்காங்கே விநாயகர் கோயில் எதிரே தலைமை விநாயகர் சிலை வைத்து வழிபாடு செய்யப்பட்டது. தேனி நகரின் பல பகுதிகள், ஆண்டிபட்டி, போடி, பெரியகுளம், கம்பம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் 863 விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு நடைபெற்றது.
விநாயகர் சிலை கரைப்பு தொடர்பாக தமிழ்நாடு அரசு மற்றும் மாண்பமை நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்களை கடைப்பிடித்து விநாயகர் சிலை ஊர்வலத்தினை அமைதியான முறையில் நடத்திடவும், விநாயகர் சிலை ஊர்வலத்தின் போது மாற்று மத வழிபாட்டு தலங்களின் அருகே கோஷங்கள் எழுப்புவதோ, பட்டாசுகள் வெடிப்பதோ கூடாது எனவும், பொதுமக்கள் மற்றும் போக்குவரத்திற்கு எவ்வித இடையூறும் ஏற்படாத வகையில் ஊர்வலம் செல்ல உரிய அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நேற்று தேனி மாவட்டம் தேவாரத்தில் விநாயகர் சிலை ஊர்வலத்தில் டிராக்டர் கவிழ்ந்து 3 சிறுவர்கள் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உயிருக்கு ஆபத்தான நிலையில், 2 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.