வேங்கை வயல் மலம் கலந்த சம்பவம்... 2 ஆண்டு நிறைவு... கிராம மக்கள் வைத்த பேனரால் பரபரப்பு...!
வேங்கை வயல் மலம் கலந்த வழக்கை தொடர்ந்து 100 ஆண்டுகள் விசாரணை செய்ய வாழ்த்துகிறோம் என கிராம மக்கள் பேனர் வைத்துள்ள சம்பவம் தற்பொழுது பேசு பொருளாக மாறி உள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம், வேங்கை வயல் கிராமத்தில் வசிக்கும் பட்டியலின மக்களுக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்ட நிலையில் அப்பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மனித மலம் கலக்கப்பட்டருந்தது தெரிய வந்தது. இந்த விவகாரம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் பலரிடமும் டிஎன்ஏ டெஸ்ட் எடுக்கப்பட்ட நிலையில், அதில் பெரிதாக எந்த முன்னேற்றமும் இல்லை.
வேங்கைவயல் வழக்கில் இதுவரை 385 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. குரல் மாதிரிகள் சோதனைக்கு அனுப்பப்பட்டது. நூற்றுக்கும் மேற்பட்டோரிடம் விசாரணை செய்த போதிலும் குற்றவாளிகள் இதுவரை கண்டுபிடிக்கவில்லை. வேங்கை வயல் சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் கடந்த ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது. ஆனால் இதுவரை வழக்கில் எந்த ஒரு முன்னேற்றமும் ஏற்படவில்லை. இந்த நிலையில் வேங்கை வயல் ஊர் பொதுமக்களால் வைக்கப்பட்டுள்ள பேனர் தற்போது பேசு பொருளாகி உள்ளது.
ஊர் மக்கள் வைத்த பேனரில்; 3-ஆம் ஆண்டு தூ(ங்கும்)வக்க விழா, வேங்கை வயல் குடிநீர் தொட்டியில் மலம் கலந்த வழக்கு புலன் விசாரணையில், அசையா ஆமை, நகரா நத்தை அத்தனையும் சொத்தை என்று எங்களால் போற்றப்படும் சிபிசிஐடி, இவ்வழக்கை தொடர்ந்து 100 ஆண்டுகள் விசாரணை செய்ய வாழ்த்துகிறோம். பாதிக்கப்பட்ட வேங்கை வயல் ஊர் பொதுமக்கள்" என வேங்கை வயல் ஊர் பொதுமக்களால் வைக்கப்பட்டுள்ள பேனரால் தற்போது பேசு பொருளாகி உள்ளது.