கள்ளக்குறிச்சி கோரம் | உயிரிழப்பு முதல் கைது நடவடிக்கை வரை!! தற்போதைய விவரம் இதோ..
கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்து 5 பெண்கள் உட்பட 59 பேர் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கிக் கொண்டிருக்கிறது. சிகிச்சையில் இருப்பவர்களில் பலர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து வருகின்றனர். இதனால் இறப்புகளின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதே சமயம் கள்ளச்சாராயம் குடித்து பாதிக்கப்பட்டவர்களுக்கு கள்ளக்குறிச்சி, சேலம் மற்றும் விழுப்புரம் அரசு மருத்துவமனை, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
நிவாரணம் ;
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சமும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் முதல்வர் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்கப்படும் என முதலமைச்சர் முக.ஸ்டாலின் அறிவித்திருந்தார். கள்ளச்சாராய சம்பவத்தில் பெற்றோரை இழந்து தவிக்கும் குழந்தைகளுக்கு மாதந்தோறும் தலா ரூ.5,000 வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.
பெற்றோரை இழந்த குழந்தைகளின் கல்விச் செலவை தமிழ்நாடு அரசே ஏற்படும் என்றும் தெரிவித்துள்ளார். குறிப்பாக, அவர்கள் பட்டப்படிப்பு வரையிலான கல்விக் கட்டணம் மற்றும் விடுதிக் கட்டணம் என அனைத்து கட்டணங்களையும் அரசே வழங்கும் என்றும் தெரிவித்துள்ளார். பாஜக சார்பில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா ஒரு லட்சம் ரூபாய் நிவாரணமாக வழங்கப்படும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்திருக்கிறார்.
கண்டனம் ;
கள்ளச்சாராயம் குடித்து ஏராளமானோர் உயிரிழந்த விவகாரத்தில் எதிர் கட்சியினர், திரைத்துறையினர் உள்ளிட்ட பலரும் திமுக அரசை கண்டித்து கண்டனம் தெரிவித்துள்ளனர். பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மத்திய இணை அமைச்சர் எல். முருகன், தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி, எடப்பாடி பழனிச்சாமி, த.வெ.க தலைவர் விஜய், நாம் தமிழர் சீமான், நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட பலரும் இந்த விவகாரத்தில் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
அரசியல் கட்சியினர் மட்டுமல்லாது திரைத்துறையினரும் கண்டனம் தெரிவித்தனர். நடிகர் சூர்யா, நடிகர் விஷால், இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ், இயக்குநர் பா.விஜய் உள்ளிட்டோர் சமூக வலைதளங்களில் திமுக அரசின் அலட்சிய போக்கை கண்டித்து கண்டனம் தெரிவித்தனர்.
சிபிசிஐடி வழக்குப்பதிவு ;
இந்த விவகாரம் தொடர்பான வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டு 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டு சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கைது நடவடிக்கை ;
கள்ளச்சாராயம் விற்பனை செய்த கண்ணுக்குட்டி என்கிற கோவிந்தராஜ், அவரது மனைவி விஜயா, சகோதரர் தாமோதரன் உள்ளிட்ட மூவரும் கைது செய்யப்பட்டனர். மெத்தனால் விற்பனையாளர்களான சின்னதுரை, மதன், ஜோசப்ராஜ் ஆகிய மூவரும் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் ராமர், மாதேஷ் எனப் பலரும் கைது செய்யப்பட்டிருந்தனர். அதோடு கள்ளச்சாராயத்தில் மெத்தனால் கலந்த விவகாரத்தில் ராமர், சின்னதுரை மற்றும் ஜோசப் ராஜா ஆகிய 3 பேர் மீதும் கொலைவழக்கு பதிவு செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து மாதேஷ் நண்பர்களான பண்ருட்டி பகுதியைச் சேர்ந்த ஹோட்டல் உரிமையாளர் சக்திவேல், கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த மீன் வியாபாரி கண்ணன் என இந்தச் சம்பவம் தொடர்பாக 12 பேர் கைது செய்யப்பட்டனர்.
Read more ; பான் கார்டில் இருக்கும் இந்த விஷயத்தை கவனிச்சீங்களா..? இது ரொம்ப முக்கியம்..!!