தவணை முறை வீடு விற்பனை நிறுத்தம்..!! - தமிழக வீட்டு வசதி வாரியம் அதிரடி
குறைந்த மற்றும் நடுத்தர வருவாய் பிரிவினருக்கு, வீடு, மனைகளை தவணை முறையில் வழங்கும் நடைமுறையை மொத்தமாக கைவிட, வீட்டு வசதி வாரியம் முடிவு செய்துள்ளது.
தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தில் பொருளாதாரத்தில் நலிவுற்ற மற்றும் குறைந்த வருவாய் பெறும் மக்களுக்காக தவணை முறையில் வீடு வாங்கும் திட்டத்தை தமிழக அரசு நடைமுறைப்படுத்தியது. அந்தவகையில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில், வீட்டு வசதி வாரியம் சார்பில், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள், குறைந்த, நடுத்தர, உயர் வருவாய் என, பல்வேறு பிரிவுகளை சேர்ந்தவர்களுக்கு, வீடு, மனைகள் ஒதுக்கப்பட்டு வந்தன.
இந்நிலையில், தவணை முறையில் பணம் வசூலிப்பதில் சிக்கல் இருப்பதாக கூறி அந்த முடிவை கைவிட வீட்டு வசதி வாரியம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. இதுகுறித்து, வீட்டு வசதி வாரிய அதிகாரி ஒருவர் கூறுகையில், குறைந்த, நடுத்தர வருவாய் பிரிவினரிடம், தவணை முறையில் வீட்டுக்கான தொகையை வசூலிப்பதில் பல்வேறு பிரச்னைகள் ஏற்படுகின்றன. இத்தகைய பிரிவினருக்கு, நகர்ப்புற வாழ்விட வாரியம் வழங்கும் வீடுகளிலும் தவணை வசூல் முறையாக நடக்கவில்லை.
மக்களிடம் இருந்து தவணை தொகையை வசூலிப்பதில், வாரியத்துக்கு கூடுதல் செலவு ஏற்படுகிறது. இதனால், வீடுகளின் விலையை, 20 சதவீதம் உயர்த்த வேண்டிய நிலை ஏற்படுகிறது. எனவே, குறைந்த, நடுத்தர வருவாய் பிரிவினருக்கான வீடு, மனைகளை தவணை முறைக்கு பதிலாக, முதலில் வருவோருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் விற்க முடிவு செய்துள்ளோம். இதனால், அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு திரும்ப பெறப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
Read more ; தமிழகத்திற்கு இன்று மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட்..!! எந்த மாவட்டங்களுக்கு தெரியுமா?