நீதிமன்ற வளாகத்தில் நடந்த பயங்கரம்..!! பட்டப்பகலில் சாதிய வன்ம படுகொலை..? நெல்லையில் பெரும் பரபரப்பு..!!
நெல்லை மாவட்டத்தின் கீழநத்தம் பகுதியைச் சேர்ந்த மாயாண்டி என்ற இளைஞர் வழக்கு விசாரணைக்காக நெல்லை பாளையங்கோட்டை மாவட்ட நீதிமன்றத்தில் இன்று (டிச.20) காலை வந்திருந்தார். அதற்கு முன்னதாகவே அங்கு வந்து மறைந்திருந்த 6 பேர் கொண்ட மர்ம கும்பல், அவரை கொலை செய்யும் நோக்கத்துடன் சுற்றி வளைத்தனர். இதை பார்த்து, சுதாரித்துக் கொண்ட மாயாண்டி, உடனடியாக அவர்களிடம் இருந்து தப்பிப்பதற்காக நீதிமன்ற வளாகத்தில் இருந்து வெளியே ஓடியுள்ளார்.
ஆனாலும், அவரை துரத்தி சரமாரியாக வெட்டி, அவரது முகத்தை சிதைத்து கொடூரமாக தாக்கியுள்ளனர். இதனால், மாயாண்டி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். கொலை செய்த அந்த கும்பல் உடனடியாக அங்கு தயார் நிலையில் இருந்த காரில் தப்பித்துச் சென்றனர். இதனைத் தொடர்ந்து நீதிமன்ற வளாகத்தில் இருந்த காவலர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் உடனடியாக அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்.
நெல்லை நீதிமன்ற வளாகத்தில் நடந்த இக்கொலை சம்பவத்தில் இதுவரை 3 பேரை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஓராண்டுக்கு முன்பு கீழநத்தம் பஞ்சாயத்தில் 2-வது வார்டு உறுப்பினராக இருந்த தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ராஜாமணி (33) என்பவரை வெட்டிக் கொலை செய்த சம்பவத்தில் மாயாண்டிக்கு தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. இந்த முன்விரோதத்தில் ராஜாமணியின் தம்பி தனது கூட்டாளிகளுடன் சென்று மாயாண்டியை கொலை செய்துள்ளார் என்றும் இது முழுக்க முழுக்க சாதிய வன்ம படுகொலை எனவும் தகவல் வெளியாகியுள்ளது.