பரபரப்பில் திமுக...! பஞ்சமி நிலம் வழக்கில் இன்று காலை 10.30 மணிக்கு உயர்நீதிமன்றம் தீர்ப்பு...!
முரசொலி பஞ்சமி நிலம் தொடர்பான வழக்கில் இன்று காலை 10.30 மணியளவில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி தீர்ப்பு வழங்க உள்ளார்.
திமுக-வின் அதிகாரபூர்வ நாளேடான முரசொலியின் அலுவலக நிலம் பஞ்சமி நிலம் என பாஜக மாநில பொதுச் செயலாளர் சீனிவாசன் கடந்த 2019ம் ஆண்டு தேசிய பட்டியலினத்தோர் ஆணையத்தில் புகார் அளித்திருந்தார். இந்த புகார் மீதான விசாரணைக்கு அனுப்பப்பட்ட நோட்டீஸை எதிர்த்தும், அறக்கட்டளை நிலம் தொடர்பாக விசாரிக்க அதிகாரம் இல்லை என்றும், சொத்துகளின் உரிமை தொடர்பான விவகாரம் என்பதால் பட்டியலின ஆணையம் விசாரிக்க முடியாது என கூறி முரசொலி அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் ஆர்.எஸ்.பாரதி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு திங்கட்கிழமை நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தபோது முரசொலி அறக்கட்டளை தரப்பில் மூத்த வழக்கறிஞர் வில்சன் ஆஜராகி, பஞ்சமி நிலம் அல்ல என அரசு அறிக்கை அளித்ததால், புகாரை முடிக்க முடிவெடுத்துள்ளதாக ஆணையம் கூறியதாகவும், ஆனால் திடீரென புகார் நிலுவையில் தான் உள்ளதாக குறிப்பிட்டார். பஞ்சமி நிலம் என்பதற்கான ஆதாரங்களை புகார்தாரர் சமர்ப்பிக்கவில்லை எனவும் தெரிவித்தார்.
தேசிய பட்டியல் இனத்தவர் ஆணையம் தரப்பில், கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சுந்தரேசன் ஆஜராகி, பட்டா மற்றும் விற்பனை பத்திரம் ஆகியவை உரிமையாளரை முடிவு செய்வதற்கான இறுதியான ஆதாரம் அல்ல எனவும், ஆணையத்தின் விசாரணைக்கு தடை விதிக்கக்கூடாது எனவும், தொடர்வதற்கு அனுமதிக்க வேண்டும் என தெரிவித்தார்.
மேலும் புகார்தாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் எஸ்.ரவி ஆஜராகி, வழக்கு நிலுவையில் இருந்தபோது பட்டா வழங்கப்பட்டதாகவும், அதனால் ஆணையம் விசாரணை செய்வது சரியானது தான் என தெரிவித்தார். வில்லங்க சான்றிதழில் 1974ல் மாதவன் நாயர் பெயரோ, அஞ்சுகம் பதிப்பகம் பெயரோ இல்லை என்றும், திருவண்ணாமலை நிலம் தொடர்பாக தான் உள்ளதாக தெரிவித்தார். அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், இந்த வழக்கில் இன்று காலை 10.30 மணியளவில் நீதிபதி தீர்ப்பு வழங்க உள்ளார்.