வீடு முன்பாக No Parking போர்டு... நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு...!
வீடுகளின் முன்பாக நோ பார்க்கிங் போர்டு அல்லது தடுப்புகள் வைப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னையில் அடையாறு, மயிலாப்பூர், அசோக்நகர், கே.கே.நகர், வேளச்சேரி உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் வசிக்கும் குடியிருப்புவாசிகள் தங்களின் வீடுகள் முன்பாக எந்தவொரு அனுமதியும் பெறாமல் ‘நோ பார்க்கிங்’ போர்டுகளை வைத்துள்ளனர். இதன்மூலம் தங்களது வீடுகளின் முன்பாக உள்ள பொது சாலைகளில் வாகனங்களை நிறுத்தக்கூடாது என தடுத்து அவ்வப்போது தகராறு செய்து வருகின்றனர்.
சில இடங்களில் வீடுகளின் முன்பாக ‘நோ பார்க்கிங்’ அறிவிப்பு பலகையுடன் பூந்தொட்டிகளை வைத்தும் வாகன ஓட்டிகளுக்கு இடையூறு செய்கின்றனர். சென்னையில் வாகனங்களை நிறுத்த முறையான வாகன நிறுத்துமிடங்கள் இல்லாததால், வாகன ஓட்டிகள் வேறு வழியின்றி தங்களது வாகனங்களை நெரிசல் மிகுந்த பகுதிகளில் நிறுத்திச் செல்ல நேரிடுகிறது. சாலைகளின் பாதுகாவலர் என்ற வகையில், சட்டவிரோத வாகனங்களை நிறுத்துவதைத் தடுக்கும் பொறுப்பு காவல்துறைக்கு உள்ளது.
பொது சாலைகளில் வாகனங்களை நிறுத்துவதை தடுக்கும் வகையில் அனுமதியின்றி இத்தகைய போர்டுகளை வைப்பதுடன், பூந்தொட்டிகளையும் வைத்துள்ளதாகவும், இதுகுறித்து தகவல் உரிமை சட்டத்தின் கீழ் விளக்கம் கேட்ட போது, இதுபோல போர்டுகள் வைக்க எந்த அனுமதியும் வழங்கப்படவில்லை என பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் வீடுகளின் முன்பாக நோ பார்க்கிங் போர்டு அல்லது தடுப்புகள் வைப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.