மகிழ்ச்சி செய்தி...! தமிழக அரசு ஊழியர்களுக்கான பணிக் கொடை ரூ.25 லட்சமாக உயர்வு...!
தமிழக அரசு ஊழியர்களுக்கான பணிக் கொடை ரூ.20 லட்சத்தில் இருந்து ரூ.25 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழக நிதித் துறை செயலர் வெளியிட்ட செய்தி குறிப்பில்; தமிழக அரசு கடந்த 2017-ல் வெளியிட்ட அரசாணைப்படி, ஓய்வுக்கால பணிக்கொடை, இறப்பு பணிக்கொடை ஆகியவை, 2016 ஜனவரி 1-ம் தேதி கணக்கிட்டு, ரூ.10 லட்சத்தில் இருந்து ரூ.20 லட்சமாக உயர்த்தப்பட்டது. மேலும், அதிகபட்ச பணிக்கொடை தொகையில் இருந்து 25 சதவீதம் அதாவது ரூ.20 லட்சத்துக்கு, ரூ.5 லட்சம் என்ற அளவில், அகவிலைப்படியின் அளவு 50 சதவீதத்தை தாண்டும்போது பணிக்கொடை உயர்த்தப்பட வேண்டும் என்பதும் குறிப்பிடப்பட்டது.
இதையடுத்து, கடந்த ஜனவரி 1-ம் தேதி நிலவரப்படி, அரசு ஊழியர்கள், ஒய்வூதியர்களுக்கு வழங்கப்படும் அகவிலைப்படி, 46 சதவீதத்தில் இருந்து 50 சதவீதமாக உயர்ந்துள்ளது. இந்நிலையில், மத்திய அரசு அனுப்பிய கடிதத்தில், இந்த ஆண்டு ஜனவரி 1-ம் தேதி முதல், 7-வது ஊதிய ஆணையத்தின் பரிந்துரைப்படி, ஓய்வுக்கால பணிக்கொடை மற்றும் இறப்புக்கால பணிக்கொடை ரூ.25 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளதாக தெரிவித்தது. இதன் அடிப்படையில், தமிழக அரசும் பணிக்கொடை உச்சவரம்பை ரூ.20 லட்சத்தில் இருந்து ரூ.25 லட்சமாக உயர்த்த முடிவெடுத்தது. இந்த உயர்வு கடந்த ஜனவரி 1 முதல் அமலுக்கு வந்துள்ளது. இதன்மூலம், கடந்த ஜனவரி 1-ம் தேதி முதல் ஓய்வுபெற்ற அரசு ஊழியர்கள் பயன்பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.