இன்று திறப்பு!... பிரமாண்ட அயோத்தி!… தமிழர்களின் பெருமையை பறைசாற்றும் கட்டடக்கலை!
அயோத்தியில் கட்டப்பட்டுள்ள புதிய விமானநிலையம் மற்றும் அதிநவீன வசதிகளைக் கொண்ட ரயில் நிலையத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைக்க உள்ளார்.
உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் கட்ட உச்சநீதிமன்றம் உத்தரவிடப்பட்டது. இதையடுத்து, அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் பணிக்காக ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த்த சேத்ரா அறக்கட்டளை உருவாக்கப்பட்டது. அதன்பிறகு 2020 ஆகஸ்ட் மாதம் ராமர் கோவில் கட்ட பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். ரூ.1000 கோடி செலவில் பிரமாண்டமாக கோவில் கட்டப்பட்டு வருகிறது. 3 அடுக்குகளாக நாகரா கட்டகலைக்கலை நுட்பத்தில் இந்த கோவில் கட்டப்பட்டு வருகிறது.
இதையடுத்து, 2024ம் ஆண்டு ஜனவரி மாதம் 22ம் தேதி ராமர் கோவில் கும்பாபிஷேகத்துடன் திறக்கப்பட உள்ளது. அன்றைய தினம் கோவில் கருவறையில் ராமர் சிலை நிறுவி குடமுழுக்கு விழா நடைபெற உள்ளது. குடமுழுக்கு விழாவுக்கான தொடக்க நிகழ்ச்சிகள் ஜனவரி 16ம் தேதி தொடங்கி நடைபெற உள்ளது. இதில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க உள்ளார். இதுதவிர 3 ஆயிரம் விவிஐபிக்கள், மடாதிபதிகள், சாமியார்கள் என 4 ஆயிரம் பேர் பங்கேற்க உள்ளனர். மேலும் 50 நாடுகளின் பிரதிநிதிகளும் பங்கேற்க உள்ளனர்.
இக்கோயிலுக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால் அயோத்தியில் உள்கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக அயோத்தியில் கட்டப்பட்டுள்ள புதிய விமானநிலையம் மற்றும் அதிநவீன வசதிகளைக் கொண்ட ரயில் நிலையத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைக்க உள்ளார். இதற்கிடையே, அயோத்தி ரயில் நிலையத்தின் பெயர் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அயோத்தி ரயில்வே சந்திப்பு (Ayodhya Railway Juction) என அந்த ரயில் நிலையத்துக்கு பெயர் இருந்த நிலையில் தற்போது அது அயோத்தி தாம் (Ayodhya Dham)என மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இன்று காலை 10.45 மணிக்கு விமானம் மூலம் அயோத்தி வரும் பிரதமர் மோடி, அங்கிருந்த நேராக புதுப்பிக்கப்பட்ட ரயில் நிலையம் செல்கிறார். இடைப்பட்ட 15 கி.மீ., தூரத்துக்கு வாகன பேரணி மேற்கொள்கிறார். அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்க தொண்டர்களும், பொதுமக்களும் திரண்டு நின்று வரவேற்பு அளிக்கவுள்ளார்கள். அதனைத்தொடர்ந்து விமான நிலையத்தை திறந்து வைக்கும் பிரதமர் மோடி, அங்கு அமைக்கப்பட்டிருக்கும் பிரமாண்ட பொது கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றுகிறார். அயோத்தி நகருக்கான திட்ட பணிகளையும் தொடங்கி வைக்கிறார்.
இந்த புதிய விமான நிலையம் இன்று திறக்கப்படும் நிலையில், ஜனவரி 6ஆம் தேதி முதல் தான் விமான சேவை தொடங்கப்பட உள்ளது. டெல்லி, மும்பை, கொல்கத்தா, ஹைதராபாத், பெங்களூரு, சென்னை உள்ளிட்ட நகரங்களுக்கு விமான சேவை தொடங்கப்பட உள்ளது . பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு அயோத்தியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
முன்னதாக இந்த கோவிலுக்கான 600 கிலோ வெண்கல மணி தமிழ்நாட்டிலிருந்து கொண்டு செல்லப்பட்டது. 4.1 அடி நீளமுள்ள இந்த மணியில், ஜெய் ஸ்ரீராம் என்று பொறிக்கப்பட்டுள்ளது. இப்போது நாமக்கல்லில் 1,200 கிலோ எடை கொண்ட 12 வெண்கல மணிகள் தயாரிக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் ராமேசுவரம், கன்னியாகுமரி உள்பட பல இடங்களிலிருந்து கடல் நீரும், அனைத்து நதிகளில் இருந்து புனித தீர்த்தமும் அபிஷேகத்துக்காக ராமர் கோவிலுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன. முக்கியமாக இந்த கோவிலின் கருவறை, முன்பக்க கதவு உள்பட கோவிலிலுள்ள 44 வாசல்களுக்கும் தேவையான அலங்கார கதவுகள் மாமல்லபுரத்திலுள்ள 40 மரச்சிற்ப கலைஞர்களால் செய்யப்படுகிறது. அதிக அளவில் நன்கொடை கொடுத்தவர் ஒரு தமிழர் என்பதோடு, தமிழ்நாட்டில் இருந்துதான் அதிக நன்கொடை பெறப்பட்டுள்ளது. ஆக அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோவிலில் தமிழகத்தின் கைவண்ணமும் இருக்கிறது என்பதில் ஒவ்வொரு தமிழருக்கும் பெருமை.