வந்த வேகத்தில் வெளியேறிய ஆளுநர்.. விளக்கம் அளித்த பதிவு சில நிமிடங்களில் நீக்கம்..!!
2025 ஆம் ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டம் இன்று தொடங்கியது. ஆண்டின் முதல் கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் தொடங்குவது மரபு என்பதால், இன்று காலை 9.30 மணிக்கு சட்டப்பேரவையில் ஆளுநர் உரை நிகழ்துவார் என எதிர்பார்க்கப்பட்டது. அதன்படி 9.30 மணிக்கு சட்டப்பேரவை வளாகம் வந்த ஆளுநர் ரவி, தமிழ்தாய் வாழ்த்து பாடிய சில நிமிடங்களிலே புறப்பட்டு சென்றார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆளுநர் வெளியேறியது குறித்து ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது. அதில் 'அரசியல் சாசனம், தேசிய கீதம் அவமதிப்புக்கு துணை போக முடியாது என ஆளுநர் வெளியேறியுள்ளார். தேசிய கீதம் பாட வேண்டும் என முதலமைச்சர் மற்றும் சபாநாயகரிடம் ஆளுநர் வைத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது. தமிழ்த்தாய் வாழ்த்து பாடிய உடன் தேசிய கீதம் பாட வேண்டும் என ஆளுநர் வலியுறுத்தினார். ஆனால் தேசிய கீதம் பாடப்படவில்லை. தமிழக சட்டப்பேரவையில் தேசிய கீதம் மீண்டும் அவமதிக்கப்பட்டுள்ளது' என ஆளுநர் மாளிகையான ராஜ்பவன் விளக்கம் அளித்துள்ளது. ஆனால் சில நிமிடங்களிலே அந்த பதிவு நீக்கப்பட்டது.
கடந்த 2023-இல் ஆளுநர் உரைக்குப் பின்னர் ஆர்.என்.ரவி பாதியில் வெளியேறியது விவாதமான நிலையில், கடந்த ஆண்டு ஆளுநர் உரையை முழுமையாகப் படிக்காமல், 4 நிமிடங்களில் முடித்தார். இதற்காக ஆளுநர் மீது சட்டப்பேரவையிலேயே பல்வேறு எதிர்வினைகளை தமிழக அரசு செய்திருந்தது. இதனால் ஆளுநர் பாதியிலேயே உரையை முடித்துக் கொண்டு சட்டப்பேரவையில் இருந்து கிளம்பிய சம்பவமும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
Read more ; பரபரப்பு.. சட்டப்பேரவையில் உரையை வாசிக்காமல் ஆளுநர் ஆர்.என்.ரவி புறப்பட்டார்..!! ஆரம்பமே இப்படியா..