Chennai: பொன்முடிக்கு செக் வைத்த ஆளுநர்!… மீண்டும் அமைச்சராக்க முடியாது!… முதல்வருக்கு பதில் கடிதம்!
Chennai: பொன்முடிக்கு அமைச்சராக பதவி பிரமாணம் செய்துவைக்க முடியாது என ஆளுநர் ஆர்.என்.ரவி முதலமைச்சருக்கு பதில் கடிதம் எழுதியுள்ளார்.
சொத்துக்குவிப்பு வழக்கில் பொன்முடிக்கு உயர்நீதிமன்றம் சில மாதங்களுக்கு முன்னர் தண்டனை விதித்திருந்தது. அதன்படி பொன்முடி மற்றும் அவரது மனைவிக்கு தலா 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் தலா 50 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது. அபராதத்தைச் செலுத்தத் தவறினால் ஆறு மாதங்கள் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டிருந்தது. இந்த தீர்ப்பால், பொன்முடி தன் எம்.எல்.ஏ மற்றும் அமைச்சர் பதவியை அடுத்தடுத்த தினங்களிலேயே இழந்துவிட்டார்.
இந்தச் சூழ்நிலையில் தன் மீதான தீர்ப்பை எதிர்த்து பொன்முடி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அது சில தினங்களுக்கு முன்னர் விசாரணைக்கு வந்தபோது பொன்முடிக்கு வழங்கப்பட்ட தண்டனையை நீதிமன்றம் நிறுத்தி வைத்தது. வழக்கில் தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டதை அடுத்து, திருக்கோவிலூர் தொகுதி எம்.எல்.ஏவாக பொன்முடி தொடர்வார் என சட்டப்பேரவை செயலகம் அறிவித்தது.
இதனை அடுத்து பொன்முடி மீண்டும் அமைச்சராவார் என எதிர்பார்க்கப்பட்டது. தண்டனை நிறுத்திவைக்கப்பட்ட அன்றே முதலமைச்சர் ஆளுநருக்கும் கடிதம் எழுதினார். ஆனால், பொன்முடி மீண்டும் அமைச்சராவார் என எதிர்பார்க்கப்பட்ட அன்று ஆளுநர் டெல்லி சென்றார். ஆளுநர் ஏற்கனவே திட்டமிட்டபடி டெல்லி செல்வதாகவும் மார்ச் 16 ஆம் தேதி மீண்டும் சென்னை திரும்புவார் என்றும் தெரிவிக்கப்பட்டது.
ஆளுநர் சென்னை திரும்பிய பின் பொன்முடி அமைச்சராவார் என எதிர்பார்க்கப்பட்ட சூழலில், பொன்முடியை அமைச்சராக பதவி பிரமாணம் செய்து வைக்க ஆளுநர் மறுத்துள்ளார். முதல்வருக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், "உச்ச நீதிமன்றம் தண்டனையைத்தான் நிறுத்தி வைத்துள்ளது, குற்றவாளி இல்லை என தீர்ப்பளிக்கவில்லை. திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதிக்கு உறுப்பினர் இல்லாமல் இருக்கக்கூடாது என்பதற்காக இந்த தீர்ப்பு வந்திருக்கலாம். ஆனால் அவர் நிரபராதி என தீர்ப்பளிக்கவில்லை, சார்ஜஸ் அப்படியே இருக்கிறது. ஆகவே பொன்முடிக்கு அமைச்சராக பதவி பிரமாணம் செய்துவைக்க இயலாது" என மறுத்துள்ளார்.
Readmore: ரம்ஜான் தொழுகை நடத்திய வெளிநாட்டு மாணவர்கள் மீது தாக்குதல்.!! அகமதாபாத்தில் பதற்றம்.!!