"முத்தான திட்டங்களால் முதன்மை மாநிலமாக தமிழ்நாடு மிளிர்கிறது..!!" - புள்ளி விவரங்களை வெளியிட்டு தமிழக அரசு பெருமிதம்!
திராவிட மாடல் அரசு செயல்படுத்தி வரும் மக்கள் நலன் காக்கும் முத்தான திட்டங்களால் இந்தியாவிலேயே தமிழ்நாடு முதன்மை மாநிலமாக மிளிர்கிறது என்று தமிழ்நாடு அரசு பெருமிதம் அடைந்துள்ளது.
இதுதொடர்பாக தமிழக அரசு விடுத்துள்ள அறிக்கையில், "முதல்வர் ஸ்டாலின் ஒவ்வொரு நாளும் தமிழ் மக்களின் முன்னேற்றத்திற்காக உழைத்து வருகிறார். அதற்காக புதிய புதிய திட்டங்களை நிறைவேற்றி வெற்றி கண்டு வருகிறார். குறிப்பாக, பெண்கள், மாணவர்கள், தொழிலாளர்கள், விவசாயிகள், மீனவர்கள் உட்பட தமிழகத்தில் வாழும் அனைத்துப் பிரிவினரும் நல்வாழ்வு பெற முதல்வர் நிறைவேற்றி வரும் திட்டங்கள் அண்டை மாநிலங்களையும், அயல்நாடுகளையும் ஈர்த்து வருகின்றன.
விடியல் பேருந்து திட்டம்:
முதலமைச்சராகப் பொறுப்பேற்றவுடன் ஆணை பிறப்பித்த 5 திட்டங்களில் ஒன்று விடியல் பயணத் திட்டம். பெண்கள், மாற்றுத் திறனாளிகள், திருநங்கையர்கள் ஆகியோருக்கான கட்டணமில்லா விடியல் பயணம் திட்டத்தில் இதுவரையில் 6661.47 கோடி ரூபாய்ச் செலவில் மகளிரும் மாற்றுத் திறனாளிகளும் திருநங்கைகளும் ஏறத்தாழ 473.61 கோடி முறை பயண நடைகளும், திருநங்கைகள் 28.62 லட்சம் பயண நடைகளும், மாற்றுத்திறனாளிகள் 3.78 கோடி பயண நடைகளும் மேற்கொண்டு மாதம் ஒன்றுக்கு 888 ரூபாய் வரை சேமிக்கும் வாய்ப்பைப் பெற்றுள்ளனர்.
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை:
ஏழை மக்களின் குடும்பங்களிலும், கிராமப் பொருளாதாரத்தைச் சுமக்கும் முதுகெலும்பாகப் பெண்கள் திகழ்கிறார்கள். கணக்கில் கொள்ளப்படாத பெண்களின் உழைப்பை முறையாக அங்கீகரிக்கத்தான் 'மகளிர் உரிமைத் தொகைத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. எனவேதான், இந்தத் திட்டத்திற்கு மகளிருக்கான உதவித் தொகை என்று இல்லாமல் 'மகளிர் உரிமைத் தொகை' என்று கவனத்துடன் பெயரிடப்படிருக்கிறது.
இத்திட்டம் 15.9.2023 அன்று காஞ்சிபுரத்தில் முதல்வர் ஸ்டாலினால் தொடங்கிவைக்கப்பட்டது. இத்திட்டத்தில் இதுவரை 1 கோடியே 15 இலட்சம் மகளிர்க்கு மாதந்தோறும் ரூ.1,000 உரிமைத் தொகையாக வழங்கப்படுகிறது. இதனால், மகளிர் சமுதாயம் தன்னம்பிக்கையுடன் தன்னுடைய அன்றாடப் பணிகளில் ஈடுபட்டு முதல்வரை பாராட்டிக் கொண்டிருக்கிறது. இந்த மகளிர் உரிமைத் தொகை இதுவரை கிடைக்காதவர்களுக்கும் வழங்கிட அரசு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
புதுமைப் பெண் திட்டம்:
பேரறிஞர் அண்ணா பிறந்த நாளில் காஞ்சி மாநகரில் தொடங்கிவைத்த ஒரு புரட்சிகரமான திட்டம் இது. 6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் பயின்ற மாணவியர், தடையின்றி உயர் கல்வி பயில வேண்டும் என்ற நோக்கத்தோடு, தமிழகத்தில் உள்ள உயர் கல்வி நிறுவனங்களில், இளநிலைப் பிரிவில் மருத்துவம், துணை மருத்துவம், பொறியியல், கலை மற்றும் அறிவியல் பாடங்கள் பயிலவும், பட்டயப் படிப்புகள் மற்றும் தொழில் துறைப் பயிற்சி நிறுவனங்களில் பயிலவும், உதவித் தொகையாக, மாதந்தோறும் ரூ.1,000 ஒவ்வொரு மாணவிக்கும் வழங்கப்பட்டு வருகின்றது.
நேரடி பயன் பரிமாற்ற முறைப்படி, இந்த உதவித்தொகை, 2.73 லட்சம் மாணவியரின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படுகின்றது. இத்திட்டத்தின் காரணமாகப் பள்ளிப்படிப்பை முடித்துக் கல்லூரிகளில் சேரும் மாணவர்கள் எண்ணிக்கை தேசிய அளவில் 26 சதவிகிதம் என குறைந்திருக்க, தமிழகத்தில் மட்டும் 52 சதவீதம் என உயர்ந்து மிகப்பெரிய சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது. இத்திட்டங்களால் குடும்பங்களின் பொருளாதாரச் சுமை அகற்றப்பட்டு, மாணவச் செல்வங்கள் தடையின்றி கல்வி கற்றிடும் இனிய சூழ்நிலைகள் வளர்ந்துள்ளன. இது திராவிட மாடல் அரசின் கொள்கைகளுக்கும் திட்டங்களுக்கும் கிடைத்துள்ள மாபெரும் வெற்றியாகும். இதேபோல மாதம் 1,000 ரூபாய் வழங்கும் ஊக்கத்தொகை வழங்கும் தமிழ்ப் புதல்வன் திட்டம் தொடங்கப்பட உள்ளது.
கிராமச் சாலைகள் மேம்பாட்டுத் திட்டம்:
முதல்வர் ஸ்டாலின் 13.1.2023 அன்று சட்டப்பேரவையில் ஆளுநர் உரை மீதான விவாதத்திற்குப் பதிலளித்தபோது, 'முதல்வரின் கிராமச் சாலைகள் மேம்பாட்டுத் திட்டம்' என்ற புதிய திட்டத்தை அரசு செயல்படுத்தும் என்றும், இரண்டு ஆண்டுகளில் 10,000 கி.மீ நீளமுள்ள ஊராட்சி ஒன்றிய சாலைகள் ரூ.4,000 கோடியில் மேம்படுத்தப்படும் எனவும் அறிவித்தார். ஊராட்சி ஒன்றிய மற்றும் கிராம ஊராட்சி சாலைகளை மேம்படுத்துதல், வலுப்படுத்துதல், பராமரித்தல் முதலியவை முதல்வரின் கிராமச் சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் நோக்கமாகும். இத்திட்டத்தின்படி, கிராமங்கள் வளமடைகின்றன. கிராமப்புர மக்கள் பயனடைகின்றனர்.
அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம்:
தமிழகத்தில் ஒடுக்கப்பட்ட சமுதாயத்தின் முன்னேற்றத்திற்காக, 'அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம்' எனும் புதிய திட்டத்தை அறிவித்துச் செயல்படுத்தி வருகிறார் முதல்வர் ஸ்டாலின். இந்த, அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம், பட்டியல் இன மற்றும் பழங்குடி இன இளைஞர்களைத் தொழில் முனைவோராக்கும் ஓர் அருமையான திட்டமாகும்.
ஆதிதிராவிட இளைஞர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் கடந்த நிதியாண்டில் மிகவும் குறுகிய காலத்திற்குள்ளாகவே 2.136 பயனாளிகளுக்கு வங்கிகளால் கடன்கள் அனுமதிக்கப்பட்டன. அத்துடன் இணையம் வழியாக நிதி மேலாண்மை, வர்த்தக புக்திகள், வரவு -செலவு மேலாண்மை போன்ற தலைப்புகளின் கீழ் தொழில் முனைவு பயிற்சிகளும் அளிக்கப்பட்டன. 1,303 தொழில் முனைர்க்கு அரசு மானியமாக மட்டும் 159.76 கோடி ரூபாய் வழங்கப்பட்டது. இதில் 288 மகளிர் தொழில் முனைவோர் 33.09 கோடி ரூபாயை மானியமாகப் பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இது ஆதிதிராவிட இளைஞர்கள் மகளிர் முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும் ஒரு புரட்சித் திட்டமாகும்.
இன்னுயிர் காப்போம் - நம்மைக் காக்கும் 48 திட்டம்:
'இன்னுயிர் காப்போம் - நம்மைக் காக்கும் 48' திட்டம் சாலை விபத்தினால் ஏற்படும் உயிர் இழப்புகளைக் குறைத்திடும் வகையிலும், அதனால் குடும்பங்களுக்கு ஏற்படும் மருத்துவச் செலவுகளை குறைப்பதற்கும் உதவுகிறது. இத்திட்டத்தின் மூலம் சாலை விபத்தினால் பாதிக்கப்பட்ட வர்களுக்கு, "முதல் 48 மணி நேரத்திற்கான அவசர மருத்துவ சிகிச்சை செலவை" தமிழக அரசே ஏற்கும். சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு, விபத்து நடந்த முதல் 48 மணிநேர நெருக்கடியான கால கட்டத்தில், துல்லியமான திட்டமிடல் மூலம், காலவிரயத்தைத் தவிர்த்து உயிரைக் காக்கும் உடனடி சிகிச்சையை இலவசமாகப் பெறுவதை இத்திட்டம் உறுதி செய்கிறது.
நான் முதல்வன் திட்டம்:
முதல்வர் ஸ்டாலினின் கனவுத் திட்டமான நான் முதல்வன் திட்டத்தின் மூலம் உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளி மாணவர்களுக்கு உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பு பெறுவதற்கான பயிற்சிகள் வழங்கப் பெறுகின்றன, திறன் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. கல்லூரியில் படித்துப் பட்டம் பெற்றும் வேலைக்கேற்ற திறன் இல்லாதவர்களாகக் காணப்படும் இளைஞர்களுக்குத் திறன் பயிற்சிகள் வழங்கி வேலைவாய்ப்புகளைப் பெற வழிவகைக்கம் திட்டம் இது. 2026-க்குள் 20 லட்சம் இளைஞர்களுக்கு திறன் பயிற்சி வழங்கி வழிகாட்டுவதை இலக்காகக் கொண்டுள்ள திட்டம். இரண்டாண்டுகளில் 28 இலட்சம் இளைஞர்கள் இத்திட்டத்தின்மூலம் பயன்பெற்றுள்ளனர். நான் முதல்வன் திட்டத்தின் பயன்பெற்ற பலர் மத்திய அரசின் குடிமைப் பணித் தேர்வுகளில் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பணிபுரியும் மகளிருக்கு 'தோழி விடுதிகள்':
சமூகநலத்துறையின் கீழ் செயல்படுத்தப்படும் இத்திட்டத்தின் கீழ் 19 மாவட்டங்களில் பணிபுரியும் மகளிருக்கான தோழி விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. மேலும் தமிழக பணிபுரியும் மகளிர் விடுதி நிறுவனம் (TNWWHCL) புதிய விடுதிகளை உருவாக்கவும், ஏற்கெனவே உள்ள விடுதிகளை அனைத்து வசதிகளுடன் மேம்படுத்ததிடவும் முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார்.
முதற்கட்டமாக, திருச்சி, கூடுவாஞ்சேரி மற்றும் தாம்பரம் ஆகிய மூன்று இடங்களில் 688 பணிபுரியும் மகளிர் பயன் பெறும் வகையில் ரூ.31.07 கோடி செலவில் பணிபுரியும் மகளிர் விடுதிகள் கட்டப்பட்டு இவ்விடுதிகளில் 259 பணிபுரியும் மகளிர் பயனடைந்து வருகின்றனர். இரண்டாம் கட்டமாக ஓசூர், திருவண்ணாமலை மற்றும் பரங்கிமலை ஆகிய 3 இடங்களில் 432 பணிபுரியும் மகளிர் பயன்பெறும் வகையில் ரூ.35.87 கோடி செலவில் தமிழக பணிபுரியும் மகளிர் விடுதிகள் கட்டப்படுகின்றன.
சேலம், தஞ்சாவூர், பெரம்பலூர், வேலூர், விழுப்புரம், திருநெல்வேலி, அடையாறு (சென்னை) ஆகிய 7 இடங்களில் 476 படுக்கை வசதிகள் கொண்ட விடுதிகள் ரூ.4.21 கோடியில் புதுப்பிக்கப்பட்டு 13.7.2023 முதல் செயல்பட்டு வருகிறது.
திருமண நிதியுதவித் திட்டத்தில் சாதனை:
மகளிர் திருமண நிதியுதவி திட்டங்களின்கீழ், 3 ஆண்டுகளில் 1 இலட்சத்து 26 ஆயிரத்து 637 மகளிர்க்கு 1,047 கோடி ரூபாய் திருமண நிதியுதவியாக வழங்கப்பட்டுள்ளது. இதில் 68 ஆயிரத்து 927 மகளிர்க்கு 8 கிராம் தங்க நாணயங்களுடன் நிதியுதவிகளும்; 57 ஆயிரத்து 710 மகளிர்க்கு நிதியுதவிகளும் வழங்கப்பட்டு மகத்தான சாதனை படைக்கப்பட்டுள்ளது.
திருநங்கைகள் நலன்:
40 வயதுக்கு மேற்பட்ட ஆதரவற்ற திருநங்கைகளுக்கு வழங்கப்படும் மாத ஓய்வூதியம் ரூ.1,000 என்பது 2023 மார்ச் முதல் ரூ.1,500 ஆக உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின்கீழ் ரூ.2.36 கோடி நிதி ஒதுக்கீட்டில் 1482 திருநங்கைகள் பயனடைந்து வருகின்றனர். திருநங்கைகளுக்குச் சொந்தமாகத் தொழில் தொடங்கிட மானியம் வழங்கும் திட்டத்தின்கீழ் மூன்றாண்டுகளில் ரூ.3 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு 518 திருநங்கைகள் சுயதொழில் மானியம் பெற்று பயனடைந்துள்ளனர்.
மீனவர் நலன்:
மீன்பிடித் தடைக்கால நிவாரணத் தொகை 5,000 ரூபாய் என்பது 8,000 ரூபாயாகவும், மீன்பிடி குறைவு காலத்திற்கான சிறப்பு உதவி தொகை ரூ.5,000 என்பது ரூ.6,000 ஆகவும் உயர்த்தப்பட்டது. இரண்டு திட்டங்களிலும் 10,20,839 மீனவக் குடும்பங்களுக்கு ரூ.589 கோடி நிவாரண உதவித் தொகை வழங்கப்பட்டது.
விவசாயிகள் நலன்:
இந்தியாவிலேயே முதல் முறையாக தமிழகத்தில்தான் வேளாண்மைக்கென தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு வேளாண் தொழில் வளர்ச்சிக்கு ஊக்கமளிக்கப்பட்டுள்ளது. ரூ.4,366 கோடி பயிர்க் காப்பீட்டு இழப்பீட்டுத் தொகை, ரூ.651 கோடியில் கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத் தொகை, ரூ.614 கோடியில் கலைஞர் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம், ரூ.270 கோடி விவசாய இயந்திரங்கள், ரூ.56 கோடியில் முதல் முறையாக ஆதிதிராவிட விவசாயிகளுக்கு 100 சதவிகித மானியம், ரூ.137 கோடியில் குறுவை சாகுபடி தொகுப்புத் திட்டம், ரூ.139 கோடியில் பயறு பெருக்கத் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.
தொழில் துறையில் புரட்சி:
2030-ஆம் ஆண்டுக்குள் தமிழ்நாட்டினுடைய பொருளாதாரத்தை 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு உயர்த்தவேண்டும் என்னும் ஒரு இலட்சிய இலக்கை நிர்ணயித்து அந்த இலக்கை எய்தும் வகையில் உயர் தொழில்நுட்பம் சார்ந்த தொழில் முதலீடுகளை ஈர்ப்பது, மற்றும் வேலைவாய்ப்புகள் மிகுந்த முதலீடுகளை ஈர்ப்பது என்ற இருமுனை அணுகுமுறைகள் கொண்டுள்ள 'முதலீட்டாளர்களின் முதல் முகவரி தமிழ்நாடு', சென்னை, கோவை , தூத்துக்குடி ஆகிய இடங்களிலும், மலேசியா, சிங்கப்பூர், ஜப்பான், ஸ்பெயின் ஆகிய நாடுகளிலும் நடத்தப்பட்ட முதலீட்டாளர்கள் மாநாடுகள் வாயிலாக மொத்தம் 9.61 இலட்சம் கோடி ரூபாய் முதலீடுகள் ஈர்க்கப்பட்டு ஏறத்தாழ 30 இலட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதற்கான ஒப்பந்தங்கள் நடைபெற்று இதுவரை தொழில் வளர்ச்சி வரலாற்றில் இல்லாத ஒரு மாபெரும் புரட்சி நிகழ்த்தப்பட்டுள்ளது.
முதல்வர் ஸ்டாலின் ஆட்சிப்பொறுப்பேற்ற பின், 45 தொழிற்சாலைகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. 27 தொழிற்சாலைகள் திறந்து வைக்கப்பட்டுள்ளன. இவற்றின் மூலமாக 74 ஆயிரத்து 757 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் அளிக்கப்பட்டுள்ளன.
தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்கக் கொள்கை:
தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்கக் கொள்கை 20-09-2023-ல் வெளியிடப்பட்டது. 2021-ம் ஆண்டு வரை தமிழகத்தில் பதிவு செய்யப்பட்ட ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் எண்ணிக்கை 2,032. இன்றைய நிலவரப்படி இது 4 மடங்கிற்கும் மேல் அதிகரித்து 8,416-ஆக உயர்ந்துள்ளது. மகளிர் ஸ்டார்ட்அப்களின் எண்ணிக்கை 2021-ம் ஆண்டில் 966 ஆக இருந்தது தற்போது மூன்று மடங்குமேல் அதிகரித்து 3,163 ஆக உயர்துள்ளதே இந்த அரசின் செயல்பாட்டிற்குக் கிடைத்த வெற்றியாகும்.
ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு உகந்த சூழலைக் கட்டமைத்துச் செயல்படும் மாநிலங்களின் பட்டியலை மத்திய அரசு வெளியிட்டது. இதில் தமிழகம் முதல் நிலையை பிடித்திருப்பதிலிருந்தே இந்த அரசின் சாதனையைத் தெளிவாகப் புரிந்துகொள்ளலாம்.
இப்படி, முதல்வர் மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றது முதல் மகளிர், மாணவர்கள், தொழிலாளர்கள், விவசாயிகள், மீனவர்கள் உள்ளிட்டோரின் முன்னேற்றத்தைக் கருத்தில் கொண்டு திராவிட மாடல் அரசு செயல்படுத்தி வரும் மகத்தான திட்டங்களால் இந்தியாவில் தமிழகம் முதல் மாநிலமாக முன்னேற்றம் கண்டுள்ளதை பத்திரிகையாளர்களும் நடுநிலையாளர்களும் பாராட்டி வருகின்றனர்." என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read more | ரவுடி திருவேங்கடத்தை என்கவுன்டர் செய்தது ஏன்? – போலீசார் விளக்கம்