தமிழ்நாடு பெயர் தந்த தங்கம்!… திராவிட மாடலை செதுக்கிய சிங்கம்!… இன்று பேரறிஞர் அண்ணா நினைவு நாள்!
காஞ்சிபுரத்தில் ஒரு நடுத்தர நெசவாளர் குடும்பத்தில் பிறந்தது ஒரு ஆண் குழந்தை. அப்போது அந்த குழந்தையின் பெற்றோருக்கு தெரிந்திருக்காது. தமிழக அரசியலில் மிகப்பெரும் புரட்சியை தங்கள் குழந்தை ஏற்படுத்தும் என்று. இன்றைய காலத்தை விட பன்மடங்கு சாதி ஏற்றத்தாழ்வுகள் நிறைந்த அந்த காலகட்டத்திலேயே சாதி மறுப்பு திருமணம் செய்துகொண்ட நடராஜன், பங்காரு அம்மாள் தம்பதியினருக்கு மகனாக பிறந்தவர் அண்ணாதுரை.
சென்னை பச்சையப்பன் கல்லூரியில் முதுகலை பட்டப்படிப்பை நிறைவு செய்த அவர், அதன் பின்னர் பள்ளி ஆசிரியரானார். அதன் தொடர்ச்சியாக தான் படித்த பச்சையப்பன் கல்லூரியிலேயே பேராசிரியர் ஆனார் அண்ணா. அப்போதே சமூக நீதிக்கொள்கையை தனது மாணவர்களிடம் தீவிரமாக பரப்பிய அண்ணா, பள்ளி ஆசிரியரில் இருந்து பத்திரிக்கையாளராக அவதாரம் எடுத்தார்.
தந்தை பெரியாரின் கொள்கைகளால் கவரப்பட்டு அவருடன் இணைந்து தமிழுக்காகவும், சாதி ஏற்றத்தாழ்வுகளை களையவும் போராடினார். பின்னர் பெரியாருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரைவிட்டு பிரிந்த அண்ணா, திராவிட முன்னேற்றக் கழகம் என்ற முதல் திராவிட அரசியல் கட்சியை 1949-ல் தோற்றுவித்தார். ஆனாலும் தன் வாழ்நாள் முடிவதும் பெரியார் காட்டிய வழியிலேயே வாழவும் ஆளவும் செய்தார் அண்ணா.
தமிழுக்காக அரும்பணியாற்றிய அண்ணா, 1938 ஆம் ஆண்டு பாரதிதாசன் உள்ளிட்ட தமிழ் பற்றாளர்களுடன் இணைந்து இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு தமிழை அழிக்க நினைத்தவர்களை அதிரவைத்தார். அதன் பின்னர் 1960 ஆம் ஆண்டு இந்திக்கு தனி அந்தஸ்த்து வழங்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாபெரும் இந்தி எதிர்ப்பு மாநாட்டை நடத்தி வெற்றி கண்டார் அண்ணா.
கடந்த 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜல்லிக்கட்டு போராட்டத்துக்கு முன்பாக தமிழர்கள் நடத்திய மிகப்பெரிய எழுச்சிப்போராட்டம் அது. இந்த போராட்டங்களுக்கு பிறகு அண்ணாவுக்கு இருந்த மக்கள் செல்வாக்கு பன்மடங்கு பெருகியது. அதன் மூலம் 1967 ஆம் ஆண்டு திராவிட முன்னேற்ற கழகம் தமிழகத்தில் மிகப்பெரும் வெற்றியை பெற்று தமிழகத்தின் முதலமைச்சர் ஆனார் அண்ணா.
இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு முதலமைச்சரான முதல் மாநிலக் கட்சியின் தலைவர் என்ற பெருமையை பெற்றார் அண்ணா. தமிழ்நாடு என பெயர் மாற்றம் செய்திடக்கோரி சங்கரலிங்கனார் உண்ணாவிரதம் இருந்த உயிர் துறந்த நிலையில், தான் முதலமைச்சர் பதவிக்கு வந்த பின்னர் மெட்ராஸ் மாகாணம் என்ற பெயரை தமிழ்நாடு என மாற்றம் செய்த அண்ணா, மும்மொழிக்கொள்கைக்கு எதிராக போராடி இருமொழிக்கொள்கையை பெற்றுத்தந்தார்.
சமூக நீதி, மாநில உரிமை, மொழி உரிமை தொடர்பான சிந்தனையாளர், அந்த சிந்தனையை வெற்றிகரமாக அரசியல் படுத்தியவர். அப்படி அரசியல் படுத்துவதற்காக மேடை, பத்திரிகை, நாடகம், சினிமா, நூல்கள் என்று எல்லா ஊடகங்களையும், கையில் எடுத்து அதற்குப் புதிய தோற்றமும், உள்ளடக்கமும் தந்தவர். இந்த ஊடகங்களில் பிற திராவிட இயக்கப் படைப்பாளிகளும் அணி அணியாக நுழைந்து தனித்துவமான ஒரு பாரம்பரியம் உருவாக காரணமாக இருந்தவர்.
காங்கிரஸ் அல்லாத கட்சி ஒன்றின் சார்பில் இந்தியாவில் முதலமைச்சரான இரண்டாவது தலைவர். தமிழ்நாட்டில் இடையறாமல் நடந்துவரும் 53 ஆண்டுகால திராவிடக் கட்சிகளின் ஆட்சிக்கு அதன் மூலம் அடித்தளம் இட்டவர். நவீன தமிழின் மீது, மக்கள் புழங்கும் தமிழின் மீது அண்ணா செலுத்தியிருக்கும் தாக்கம் அளப்பரியது. பெரிதாக ஆவணமாக்கப்படாதது.
எல்லாவற்றுக்கும் மேலாக உலகில் தமிழர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் ஒரு நிலப்பரப்புக்கு அதன் முகவரியாக விளங்கும் 'தமிழ்நாடு' என்ற பெயரை சூட்டியவர் அண்ணா. தங்களை ஒரு தனித்த தேசிய இனமாக உணரத் தொடங்கிய தமிழர்களின் அரசியல் அபிலாஷைகளுக்கு அசைக்கமுடியாத ஓர் அங்கீகாரமாகிவிட்டது இந்தப் பெயர்.
அண்ணா என்ற பெயர் ஒரு பண்பாட்டின் குறியீடாகிவிட்டது. அது ஒரு வரலாறாக, அடையாளமாக கொண்டாடப்படுகிறது. அவரது பெயரில் கட்சி, பல்கலைக்கழகம், விமான நிலையம், சாலை, நூலகம் என்று ஏராளமான நிறுவனங்கள் உள்ளன. ஆனாலும் கூட நவீன தமிழ்நாட்டின் மொழி, அரசியல், பண்பாடு ஆகியவற்றின் மீது அவர் செலுத்திய தாக்கத்தின் பரிமாணத்தோடு ஒப்பிடும்போது இந்த அங்கீகாரம் குறைவே.
அன்று அண்ணா அரசியலில் விதைத்த திராவிட விதை தான், இன்றளவும் தேசிய கட்சிகளால் திராவிடக்கட்சிகளை வீழ்த்த முடியாததற்கு மூலகாரணம் எனலாம். அண்ணாவின் நினைவு நாளான இன்று அவர் வழிகாட்டிய சமூக நீதியையும் சமத்துவத்தையும் காக்க உறுதியேற்ப்போம்.