சிறையில் இருந்து வெளிவந்ததும் மகாவிஷ்ணுவின் காலில் விழுந்த சிறுமிகள்..? இன்னும் பல உயிர்களுக்கு சேவை செய்வோம் என உறுதி..!!
பரம்பொருள் அறக்கட்டளையை நடத்தி வரும் மகாவிஷ்ணு என்பவர் அரசுப் பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு முன்பாக தன்னை உணர்தல் என்ற ஆன்மீக வகுப்பை நடத்தியுள்ளார். அப்போது மாற்றுத்திறனாளிகள் குறித்து பேசி சர்ச்சையில் சிக்கிய அவர், கைது செய்யப்பட்டார். இதையடுத்து, அவரை 15 நாள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்கிடையே மகாவிஷ்ணுவை 7 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றத்தில் போலீசார் மனு தாக்கல் செய்தனர்.
தொடர்ந்து 3 நாட்கள் மகாவிஷ்ணுவை விசாரிக்க அனுமதி கிடைத்தது. இதனையடுத்து திருப்பூரில் உள்ள பரம்பொருள் அறக்கட்டளை உள்ளிட்ட இடங்களுக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில், தான் தவறு செய்யவில்லை என்றும் சித்தர்கள் தன்னிடம் சொன்னதை பேசியதாகவும் மகாவிஷ்ணு கூறியதாக தகவல் வெளியானது. இந்நிலையில், தனக்கு ஜாமீன் வழங்க கோரி மகாவிஷ்ணு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இதையடுத்து, இந்த மனுவை விசாரித்த சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி கார்த்திகேயன், மகாவிஷ்ணுவுக்கு நேற்று முன்தினம் ஜாமீன் வழங்கினார். இந்நிலையில், சிறை நடைமுறைகள் முடிந்து இன்று புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த மகாவிஷ்ணு ஜாமீனில் வெளிவந்தார். அப்போது அங்கு பரம்பொருள் அறக்கட்டளையைச் சேர்ந்த ஏராளமான நிர்வாகிகள், மகாவிஷ்ணுவின் ஆதரவாளர்கள் திரண்டு நின்று, மாலை அணிவித்தும், பொன்னாடை போர்த்தியும் வரவேற்றனர்.
அதைத்தொடர்ந்து, அங்கிருந்தவர்கள் சிலர் அவரது காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கினர். சிறுமிகளுக்கு கண்ணை மூடி ஆசி வழங்கிய விஷ்ணு, இன்னும் பல உயிர்களுக்கு நாம் சேவை செய்வோம் என கூறினார். அப்போது ஆதரவாளர் ஒருவர் மகாவிஷ்ணு வாழ்க எனக் கூற சிறையில் அப்படி எல்லாம் செய்யக்கூடாது என்று கூறி அங்கிருந்து வெளியேறினார் மகாவிஷ்ணு.