36 மணிநேரத்துக்கு மேல் தொடர்ந்த பேய் மழை!… 47 ஆண்டுகளில் இல்லாத அளவில் சென்னையை புரட்டி போட்ட பெருமழை வெள்ளம்!
மிக்ஜாம் புயல் காரணமாக 47 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 36 மணி நேரத்துக்கும் மேல் தொடர்ந்து கொட்டி தீர்த்த பெருமழையால் தலைநகர் சென்னை மற்றும் புறநகர் பகுதிகள் தீவாக மாறியது. திரும்பிய பக்கமெல்லாம் சாலைகள் வெள்ளக்காடாக காட்சியளிப்பதால் ரயில், பஸ் சேவை ரத்தானது. இன்று முற்பகலில் புயல் கரையை கடக்கும் என்பதால், பொதுமக்கள் யாரும் தேவையில்லாமல் வெளியே வர வேண்டாம் என்று அரசு எச்சரித்துள்ளது.
பலத்த காற்றுடன் மழை பெய்ததால் சென்னைவாசிகள் இரவில் தூங்காமல் விழித்திருக்க வேண்டிய நிலை உருவானது. அது மட்டுமல்லாமல் பல இடங்களில் பாதுகாப்பு கருதி மின்சாரம் நிறுத்தப்பட்டது. இதனால், நேற்று முன்தினம் இரவு முழுவதுமே சென்னை மக்களுக்கு பயத்துடனே முடிந்தது. இரவு முழுவதும் விடாமல் கொட்டி தீர்த்த மழையால் சென்னையில் அனைத்து சாலைகளிலும் பல அடி உயரத்துக்கு மழைநீர் தேங்கி வெள்ளக்காடாக காட்சியளித்தது. இதனால், ஒரு பகுதியில் இருந்து மற்றொரு பகுதிக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.
சாலைகளில் தேங்கி உள்ள வெள்ளநீரை அகற்றும் பணியில் மழையையும் பொருட்படுத்தாமல் மாநகராட்சி ஊழியர்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். அத்தியாவசிய தேவைகள் தவிர்த்து அரசு, தனியார் அலுவலகங்கள், ரேஷன் கடைகள், டாஸ்மாக் என அனைத்தும் மூடப்பட்டன. செல்போன் சேவையும், இணையவழி சேவையும் பல மணி நேரம் முடங்கியது. இதனால் மக்கள் வீடுகளில் முடங்கும் நிலை ஏற்பட்டது. தொடர் மழையால் சென்னை மக்களை அப்படியே முடக்கி போட்டது என்று தான் சொல்ல வேண்டும். அந்த அளவுக்கு நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று இரவு வரை மக்கள் வீட்டை விட்டு வெளியேறவே முடியவில்லை.
நேற்று காலை 8 மணி வரை சென்னை மற்றும் புறநகர் ரயில் சேவை நிறுத்தப்பட்டது. அதன் பின்னர் பொதுமக்கள் நலன் கருதி ஒரு மணி நேரத்துக்கு ஒரு ரயில் இயக்கப்பட்டது. குறிப்பாக ஆவடி, அரக்கோணத்தில், திருவள்ளூரில் இருந்து இயக்கப்பட்ட மின்சார ரயில்கள் அனைத்தும் சென்ட்ரலுக்கு இயக்கப்படவில்லை. இதனால், சென்ட்ரலுக்கு வர வேண்டிய பயணிகள் அனைத்தும் குழந்தைகளுடன் கடும் பாதிப்புக்குள்ளாகினர். சென்னையில் ஒரு சில இடங்களில் பேருந்துகள் இயங்கினாலும் 8 மணி வரை தற்காலிகமாக பேருந்து சேவை நிறுத்தப்பட்டது. திருவள்ளூர் மாவட்டத்தில் பாதுகாப்பு கருதி பேருந்து சேவை நிறுத்தப்பட்டது.
வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில், சில இடங்களில் படகுகள் மூலம் மக்கள் மீட்கப்பட்டனர். மிக்ஜாம் புயல் காரணமாக மெரினா, பட்டினப்பாக்கம் உள்ளிட்ட கடற்கரை பகுதிகளுக்கு செல்ல பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை அருகில் உள்ள நிவாரண மையங்களுக்கு செல்லும்படி சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் உத்தரவிட்டிருந்தார். அதன்படி நிறைய பேர் நிவாரண மையங்களுக்கு சென்றனர். அங்கு அவர்களுக்கு 3 வேளையும் உணவு வழங்கப்பட்டது. மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டது. பெசன்ட் நகர் கடற்கரைக்கு செல்லும் சாலைகளில் தடுப்புகள் அமைக்கப்பட்டன. சென்னையில் இடைவிடாமல் கொட்டிய கனமழையால் ராயப்பேட்டை, அசோக் நகர், வடபழனி வெள்ள நீரில் மிதக்கிறது.
இதே போல சென்னையில் பல்வேறு இடங்களில் வீடுகளுக்கு வெளியில் நிறுத்தப்பட்டிருந்த கார்கள், இரு சக்கர வாகனங்கள் வெள்ள நீரில் அடித்து செல்லப்பட்டன. குறிப்பாக ஆம்புலன்ஸ்கள் கூட மருத்துவமனைக்கு செல்ல முடியாமல் வெள்ள நீரில் சிக்கி தவித்தது. சென்னையில் பல இடங்களில் பெட்ரோல் பங்க், கடைகள் அடைக்கப்பட்டன. பெரும்பாலான மளிகை கடைகள் உள்ளிட்ட அத்தியாவசிய கடைகளும் அடைக்கப்பட்டதோடு, உணவு டெலிவரியும் முடங்கியதால் மக்கள் பெரும் தவிப்புக்குள்ளாகினர்.
சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் செந்தாமரை கண்ணன் கூறியதாவது: மிக்ஜாம் புயல் தெற்கு ஆந்திரா கடலோரப்பகுதிகளை ஒட்டி வடக்கு திசையில் நகர்ந்து இன்று முற்பகல் தெற்கு ஆந்திரா கடற்கரையை நெல்லூருக்கும் மசூலிபட்டினத்திற்கும் இடையே பாபட்லாவிற்கு அருகே தீவிர புயலாக கடக்கக்கூடும். அச்சமயத்தில் காற்றின் வேகம் மணிக்கு 90 முதல் 100 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 110 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். இதனால் இன்று தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருவள்ளூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகப்பட்சமாக சென்னை பெருங்குடியில் 29 சென்டி மீட்டர் மழை பெய்துள்ளது. ஆவடி 28 செ.மீ, ஆலந்தூர், சென்னை விமானநிலையம் தலா 25, அடையார், மீனம்பாக்கம், நுங்கம்பாக்கம், புழல் ஏஆர்ஜி, சோழவரம் தலா 23 செ.மீ, மகாபலிபுரம், எம்ஜிஆர் நகர், கோடம்பாக்கம், சிடி மருத்துவமனை தண்டையார்பேட்டையில் தலா 22 செ.மீ, வளசரவாக்கம், சோழிங்கநல்லூர், டிஜிபி அலுவலகம், பள்ளிக்கரணை, அண்ணா பல்கலைக்கழகம், பொன்னேரியில் தலா 21 செ.மீ, புழல், பெரம்பூர், ஐஸ் ஹவுஸ், செங்குன்றத்தில் தலா 20 சென்டி மீட்டர் மழையும் பெய்துள்ளது என்றார். நேற்று இரவு 10 மணியுடன் 28 மணி நேரம் தொடர்ச்சியாக கொட்டிய மழையால் சென்னை தத்தளிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இன்றும் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. இதனால், யாரும் வெளியே வர வேண்டாம் என்று தமிழக அரசு எச்சரித்துள்ளது.
மிக்ஜாம் புயல் இன்று கரையை கடக்கும் நிலையில், லட்சத்தீவு அருகே வரும் 7 அல்லது 8ம் தேதி மேலும் ஒரு காற்றத்தழுத்த தாழ்வு நிலை உருவாக உள்ளது. மேலும் 8ம் தேதி அந்தமானுக்கு தெற்கு பகுதியில் ஒரு காற்றத்தழுத்தம் உருவாக உள்ளது. இது, வலுப்பெற்று தமிழக கடலோர பகுதிகளுக்கு நெருங்கி வந்து 12ம் தேதி தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களில் மழை கொட்டும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.