விழா மேடையில் இடம் கொடுக்காத ஆத்திரம்..!! காவலரை கன்னத்தில் அறைந்த பாஜக எம்எல்ஏ..!! வெடித்தது புதிய சர்ச்சை..!!
பாஜக எம்எல்ஏ ஒருவர் காவலரை கன்னத்தில் அறைந்த சம்பவம் மகாராஷ்டிராவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புனே நகரில் சசூன்ஸ் மருத்துவமனையில் திருநங்கைகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கான தனி வார்டு திறக்கப்பட்டது. இந்த விழாவில் மகாராஷ்டிரா துணை முதலமைச்சர் அஜித் பவார் கலந்துகொண்டார். விழா மேடையில் பாஜக எம்எல்ஏ சுனில் காம்ப்ளேவின் பெயர் இடம்பெறவில்லை. இதனால் விரக்தியடைந்து மேடையில் இருந்து கீழே இறங்கியபோது பாஜக எம்எல்ஏ சுனில் காம்ப்ளே, தடுமாறினார்.
அப்போது கோபமடைந்த அவர், அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த காவலரை கன்னத்தில் அறைந்தார். இதனால் அங்கு கூடியிருந்த அனைவரும் அதிர்ச்சிக்குள்ளாகினர். தொடர்ந்து பாஜக எம்எல்ஏ அந்த இடத்திலிருந்து புறப்பட்டுச் சென்றார். இதுதொடர்பான வீடியோவும் சமூகவலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதற்கிடையே, காவலரை அறைந்த பாஜக எம்எல்ஏக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
கண்டனங்கள் வலுத்ததை அடுத்து, பாஜக எம்.எல்.ஏ சுனில் காம்ப்லே மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்மீது சட்டப்பிரிவு 353-ன் கீழ் புனேவில் உள்ள பண்ட்கார்டன் காவல்நிலையத்தில் வழக்குப்பதியப்பட்டுள்ளது. பாஜக எம்எல்ஏ சுனில் காம்ப்ளே ஏற்கனவே பெண் ஊழியரை துன்புறுத்தி சர்ச்சையில் சிக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.