நெல்லையை புரட்டி எடுத்த வெள்ளம்!… 696 கர்ப்பிணிகளை பாதுகாக்க ஆக்ஷனில் இறங்கிய ஆட்சியர்!… குவியும் பாராட்டுகள்!
தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக திருநெல்வேலியில் அடுத்த 30 நாட்களில் மகப்பேறு தேதி உள்ள 696 கர்ப்பிணிகள் முன்னெச்சரிக்கையாக மருத்துவமனையில் சேர்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும், முதற்கட்டமாக அடுத்த 7 நாட்களில் மகப்பேறு தேதிகளில் உள்ள 24 கர்ப்பிணிகள் முன்னெச்சரிக்கையாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
வளிமண்டல சுழற்சி காரணமாக கடந்த இரண்டு தினங்களாக திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டதையடுத்து, கன மழை பெய்து வருகிறது. நெல்லையைப் பொறுத்தவரை 1992ஆம் ஆண்டிற்கு பிறகு தற்போது வரலாறு காணாத மழை பெய்துள்ளதாகவும், மேலும் 150 ஆண்டுகளில் இல்லாத அளவில் வெள்ள பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கனமழை காரணமாக நெல்லை மாவட்டமே வெள்ளத்தில் மூழ்கியுள்ள சூழலில் பொதுமக்கள் தொடர்ந்து உதவிக்காக தமிழக அரசை தொடர்பு கொள்ள முயற்சித்து வருகின்றனர். பொதுமக்கள் உதவி கேட்டு சமூக வலைதளங்களில் தொடர்ந்து தங்களது பதிவுகளை பதிவிட்டு வருகின்றனர்.
வெள்ளத்தில் சிக்கி உள்ள பொதுமக்களை மீட்க தமிழக அரசு தொடர்ந்து தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பேரிடர் மீட்பு படை குழுவினருடன் தற்போது ஹெலிகாப்டர் போன்ற வசதிகளுடன் இந்திய ராணுவத்தினரும் களமிறங்கியுள்ளனர். ஆயிரக்கணக்கான மக்கள் தொடர்ந்து மீட்க பட்டு நிவாரண முகாம்களில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டு அவர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து தரப்பட்டு வருகிறது. மேலும் வெள்ளத்தில் சிக்கியுள்ள மக்களுக்கு உணவு விநியோகமும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் நெல்லை மாவட்டத்தில் அடுத்த ஏழு நாட்களில் மகப்பேறு தேதிகளில் உள்ள 24 தாய்மார்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். மேலும், "திருநெல்வேலி மாவட்டத்தில் அடுத்த 30 நாட்களில் மகப்பேறு தேதிகளில் உள்ள 696 கர்ப்பிணி பெண்களை தொடர்பு கொண்டு மருத்துவமனையில் சேர்க்க 17.12.2023 காலை முதல் அறிவுறுத்தப்பட்டு, அடுத்த ஏழு நாட்களில் மகப்பேறு தேதிகளில் உள்ள 24 தாய்மார்கள் முன்னெச்சரிக்கையாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்" இவ்வாறு தெரிவித்துள்ளார்.